பெண்ணைக் காப்பாற்றி விட்டு உயிர்துறந்த ஆடவர்
இந்தோனேசியாவின் பாலித் தீவில் சுற்றுப்பயணி ஒருவரைக் காப்பாற்ற சென்ற வேளையில் தம் உயிரை இழந்த ஆடவரின் உடல் கண்டுபிடிக்கபட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரேக் லேட்லி (Craig Laidley) கடந்த புதன்கிழமை (16 அக்டோபர்) பாலித் தீவின் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தார்.
தீடீரென்று யாரோ உதவிக்குக் குரல் எழுப்புவதை அவர் கேட்டார்.
29 வயது ஜெர்மானியப் பெண் ஒருவர் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.
56 வயது லேட்லி சற்றும் தயங்காமல் கடலுக்குள் குதித்ததாக The Guardian செய்தி நிறுவனம் சொன்னது.
அவர் பெண்ணைப் பிடித்துக்கொண்டு சில பாறைகளுக்கு அருகே நீந்தினார்.
பெண் கரைக்குத் திரும்பினார்.
லேட்லியும் கரைக்குச் செல்ல முயற்சி செய்தபோது திடீரென்று ஒரு பலமான அலை வந்தது.
அது ஆடவரைக் கடலுக்குள் இழுத்துச் சென்றது.
லேட்லி எங்குச் சென்றார் என்று தெரியாத நிலை ஏற்பட்டது.
இரண்டு நாள்கள் கழித்து அவரின் உடல் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு கடற்கரையில் ஒதுங்கியது.
அவர் உயிரைப் பணயம் வைத்து யாரோ ஒருவரைக் காப்பாற்றியதில் ஆச்சரியம் ஏதும் இல்லை என்று லேட்லியின் குடும்பத்தார் கூறினர்.
லேட்லி எப்போதும் சுயநலம் பாராமல் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார் என்று அவர்கள் நினைவுகூர்ந்தனர்.