அரச ஊழியர்களின் சம்பளத்தை ஜனவரி முதல் உயர்த்த வேண்டும் – தமது அரசின் முடிவு சட்டபூர்வமானது என்கிறார் முன்னாள் ஜனாதிபதி ரணில்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில் தாம் எடுத்த அமைச்சரவைத் தீர்மானத்தை உடனடியாக சமகால அரசு அமுல்படுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

“ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சம்பள அதிகரிப்பை வழங்க நாம் திட்டமிட்டிருந்தோம். சம்பள அதிகரிப்பு வழங்கப்படாவிட்டால், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியானது எமது அரசால் ஒதுக்கப்பட்டது என்பதை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்.” – என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் புதிய ஜனநாயக முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் அவர் மேலும் கூறியதாவது:-

”அரசமைப்பின் 43ஆவது சரத்தின் கீழ் அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த நாம் தீர்மானம் எடுத்திருந்தோம். அனைத்து அரச ஊழியர்களிடமிருந்தும் பெறப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலித்து சம்பள அதிகரிப்பை வழங்கத் தீர்மானித்திருந்தோம்.

சம்பள உயர்வுக்கான கோரிக்கை நியாயமானது. 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, ஊதியத்தின் மதிப்பு 50 சதவீதம் குறைந்துள்ளது. மக்கள் மிகவும் நெருக்கடியிலேயே வாழ்ந்தனர். அவர்கள் கடனில் மூழ்க வேண்டியிருந்தது. சிலர் தங்கள் சொத்துக்களை விற்க வேண்டியிருந்தது. நான் பொறுப்பேற்ற ஆரம்ப காலத்தில் நிவாரணம் கொடுக்கும் நிலை இருக்கவில்லை. அதை நாட்டுக்கு அறிவித்தேன். சிலர் சம்பளத்தை இருபதாயிரம் ரூபாவால் உயர்த்தச் சொன்னார்கள்.

2024இல் பத்தாயிரம் ரூபா அதிகரிப்பை வழங்கினோம். ஆனால், அந்தப் பத்தாயிரம் ரூபா போதாது. பணத்தின் மதிப்பு 50 சதவிகிதம் குறையும்போது, மக்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படும். சில குழந்தைகள் காலை உணவு இல்லாமல் பாடசாலைக்குச் செல்கின்றனர். பல குடும்பங்களில் உள்ள குழந்தைகள் பகுதிநேர வகுப்புகளுக்குச் செல்வதை நிறுத்திவிட்டனர்.

சமூக அமைப்புகள் சிதைவதை நான் விரும்பவில்லை. இதன்படி, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய உதய செனவிரத்ன குழு நியமிக்கப்பட்டது. அவர்களது சிபாரின் பிரகாரம் சம்பளத்தை உயர்த்த முடியாது என்று திறைசேரியின் செயலாளர் கூறினார்.

ஜனாதிபதியின் செயலாளருடன் கலந்துரையாடி உரிய சம்பளத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பதைக் கண்டறியுமாறு கூறினேன். பின்னர், பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட்டது. ஒரே ஆண்டில் சம்பள உயர்வை வழங்காமல் 50 சதவீதத்தை ஓராண்டிலும், மீதி 50 சதவீதத்தை மறுவருடத்திலும் வழங்க முடியும் என்று தீர்மானிக்கப்பட்டது.

மீண்டும் எனது செயலாளராக இருந்த சமன் ஏக்கநாயக்கவுடன் முதலில் கலந்துரையாடினேன். எனது பொருளாதார ஆலோசகர் கலாநிதி சமரதுங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோருடனும் கலந்துரையாடினேன். இறுதியில் இந்தச் சம்பள உயர்வை வழங்குவதற்கு உடன்பாட்டுக்கு வந்தோம்.

அதன் பின்னர்தான் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பித்தேன். அந்த அமைச்சரவை ஆவணத்தில் ஜனாதிபதி என்ற முறையில் நான் கையெழுத்திட்டுள்ளேன். அந்த முடிவுக்குத் திறைசேரியின் கருத்துகள் தேவையில்லை. அமைச்சரவை எந்த முடிவையும் எடுக்கலாம். நாங்கள் ஐக்கிய இராச்சியத்தின் அமைச்சரவை கையேட்டின்படிதான் செயற்படுகின்றோம்.

எனது நண்பர் விஜித ஹேரத் இதற்கு முன்னர் அமைச்சரவையில் இருந்தார் என நான் நினைக்கவில்லை. அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு எமது அரசு எடுத்த தீர்மானம் முற்றிலும் சட்டபூர்வமானது.

அமைச்சு என்பது ஓர் அமைப்பு. அமைப்புக்குச் சட்டங்கள் இல்லை. அரசமைப்பின் 52 ஆவது பிரிவின் கீழ் அமைச்சரின் தலைமையில் அமைச்சு உள்ளது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.