ஐரோப்பிய ஒன்றியத்தினர் சங்கு கூட்டணியுடன் பேச்சு – சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிக்கை.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிராந்திய இலங்கைக்கான பிரதிநிதிகளுக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையில் இணைய வழிக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இது தொடர்பில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

“எமது கூட்டணி சார்பில் நானும், செல்வம் அடைக்கலநாதனும் மற்றும் சுரேன் குருசாமியும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிராந்திய இலங்கைக்குப் பொறுப்பான பிரதிநிகளுடன் இணையவழிக் கலந்துரையாடலில் நேற்றிரவு ஈடுபட்டோம்.

முக்கியமாக ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு இங்குள்ள நிலமைகள் தொடர்பிலும், அடுத்து வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும், அமையும் நாடாளுமன்றம் எவ்வாறு அமையக்கூடும் என்பது தொடர்பாகவும் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன.

அதுதவிர இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள், அதைத் தீர்க்கக் கூடிய வகையில் புதிய ஜனாதிபதி இருப்பாரா? வரக்கூடிய அரசு இருக்குமா? 23 அமைப்புக்களின் கூட்டாக உருவாகியுள்ள தேசிய மக்கள் சக்திக்குள் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாக எவ்வாறான கருத்துக்கள் இருக்கின்றன, சர்வதேச உறவுகள் தொடர்பில் எவ்வாறான நிலைப்பாடுகள் இருக்கப் போகின்றன, இவர்கள் எல்லோரும் இணைந்து சரியான வழியில் செல்வார்களா? என்பது பற்றியும், தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை என்பது தீர்க்கப்படுமா? தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதில் எவ்வளவு தூரம் இந்த அரசு விருப்புடன் இருக்கின்றது என்பவை தொடர்பிலும் கலந்துரையாடினோம்.

நாம் இந்த அரசின் இயலாமை பற்றியும் சுட்டிக்காட்டினோம். முக்கியமாக தேசிய இனப்பிரச்சினை என்ற ஒன்றில்லை என்ற தோரணையிலும், குறைந்தபட்சம் 13 ஆவது திருத்தம் கூட தேவையில்லை என்ற தோரணையிலும் அவர்கள் பேசி வருவது தொடர்பில் எடுத்துக் கூறியிருக்கின்றோம்.

கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக நடந்த போராட்டங்களிலும் போரிலும் இலட்சக்கணக்கான மக்கள் உயிரைப் பலிகொடுத்ததே தமிழ் மக்கள் ஒரு அரசியல் அதிகாரத்துடன் இந்தமண்ணில் வாழ வேண்டும் என்பதற்காக.

இந்த அரசியல் அதிகாரங்கள் தொடர்பில் அரசு எந்தவிதமான கரிசனையும் கொண்டதாகவும் தெரியவில்லை. இந்நிலை தொடருமானால் தமிழ் மக்களுக்கும் இந்த அரசுக்கும் இடையில் இடைவெளிதான் அதிகரிக்கும் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.

வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைத்தால் அல்லது மாறாக தொங்கு நாடாளுமன்றம் வந்தால் எப்படி நாட்டின் எதிர்காலம் இருக்கும் என்பது பற்றியும் கருத்தாடினோம்.

ஐரோப்பிய யூனியன் இலங்கைக்குப் பல்வேறுபட்ட உதவிகளைச் செய்து வருகின்றது. அதேநேரம் நல்லிணக்கம் தொடர்பான விடையங்களை முன்னெடுப்பதில் முக்கியமான பங்கினை ஆற்றி வருகின்றது. அந்த நல்லிணக்க நடவடிக்கைகள் ஒழுங்கான முறையில் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வியும் எழுந்தது.

இங்கு நல்லெண்ணச் செயற்பாடுகள் எதுவும் திட்டமிட்ட வகையில் நடக்கவில்லை. யுத்தம் நடந்த இந்த மண்ணில் ஆயிரக்கணக்கான பெண் தலைமத்துவக் குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களுக்கான நிவாரணப் பணிகள் எதுவும் நடக்கவில்லை. இதேபோல் காணாமல்போனோர் பற்றி எந்தவிதமான குறைந்தபட்ச நடவடிக்கையோ அல்லது பொறிமுறையோ உருவாக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளோம்.

அநேகமாக எதிர்வரும் ஜனவரி மாதமளவில் மீண்டும் ஒருமுறை சந்தித்து இன்னும் விவரமாக இவை தொடர்பில் பேசலாம் எனவும் முடிவெடுக்கப்பட்பது.” – என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.