அமெரிக்கத் தூதர் ஜுலீ சங் யாழ். பல்கலைக்கு விஜயம்.

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் மற்றும் தூதரக அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டனர்.

ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தால் யூ.எஸ். எயிட் நிதியுதவியுடன் யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் மெய்யியல் துறையால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக ஒத்திசைவு மற்றும் நல்லிணக்க செயற்றிட்டத்தின் கீழ் நடத்தப்படும் “அகம்” உளவளத்துணை நிலையத்துக்கே அமெரிக்கத் தூதுவர் தலைமையிலான குழுவினர் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இந்த விஜயத்தின்போது, அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் உடன்,யூ.எஸ். எயிட் இன் சமூக ஒத்திசைவு மற்றும் நல்லிணக்கச் செயற்றிட்டத்தின் தலைமை அதிகாரி ஜெயதேவன் கார்த்திகேயன் மற்றும் தூதரக அதிகாரிகளும், யாழ். பல்கலைக்கழகத்தின் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் மற்றும் உயப் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி ஆகியோருடன் மெய்யியல் துறைத் தலைவர் திருமதி அபிராமி ராஜ்குமார், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே.கஜவிந்தன், உளவள ஆலோசகர் திருமதி ஆர்.சாவித்திரிதேவி உட்படப் பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் உளவியல், மெய்யியல் துறைகளின் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் “அகம்” உளவளத்துணை நிலையத்தின் செயற்பாடுகளைப் பார்வையிட்டதோடு மாணவர்களுடன் அளவளாவி நிலைமைகளைக் கேட்டறிந்தார். அதன் பின்னர் துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுடன் கலந்துரையாடிய அமெரிக்கத் தூதுவர் தற்கால நிலைமைகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.