நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான முன்னாயத்த கலந்துரையாடல்.
வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான முன்னாயத்த கலந்துரையாடல், யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர்,
“நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் செல்லுபடியற்ற வாக்குகள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகமாகவுள்ளதால், நாடாளுமன்றத் தேர்தல வாக்களிப்பு முறை பற்றிய விழிப்புணர்வுத் திட்டத்தை பிரதேச செயலக ரீதியாக மக்கள் மத்தியில் முன்னெடுக்கவுள்ளோம். அதற்குப் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துவதற்கு பிரதேச செயலகர்கள் ஒத்துழைப்பை நல்க வேண்டும்.” – என்றார்.
பிரதேச செயலக பிரிவு ரீதியாக தேர்தல்கள் முறைப்பாட்டு பிரிவுகளை பிரதேச செயலகங்களில் ஸ்தாபிப்பது தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் உதவித் தேர்தல் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ் மற்றும் அனைத்துப் பிரதேச செயலாளர்களும் கலந்துகொண்டார்கள்.