காஸா மீது இஸ்‌ரேல் தாக்குதல்; 42 பேர் மரணம்

காஸா மீது இஸ்‌ரேல் நடத்திய தாக்குதலில் 42 பேர் மாண்டனர்.

இத்தாக்குதல் அக்டோபர் 23ஆம் தேதியன்று நடத்தப்பட்டது.

காஸாவின் வடக்குப் பகுதியை இஸ்‌ரேல் சுற்றிவளைத்து தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.

அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகள், அகதிகள் முகாம் ஆகியவற்றை இஸ்‌ரேலியப் படைகள் சுற்றிவளைத்தன.

தெற்குத் திசையை நோக்கிச் செல்லுமாறு அங்குள்ள பாலஸ்தீனர்கள், மருத்துவப் பணியாளர்கள், குடியிருப்பாளர்கள் ஆகியோருக்கு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

காஸாவின் வடக்குப் பகுதியில் இஸ்‌ரேல் குண்டுமழை பொழிந்து வருவதால் இளம்பிள்ளை வாத நோய்க்கான தடுப்பூசி போடும் பணிகளைத் தொடங்க முடியவில்லை என்று காஸா சுகாதார அமைச்சும் உலக சுகாதார நிறுவனமும் தெரிவித்தன.

ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் ஹமாஸ் போராளிகள் மீண்டும் ஓரிடத்தில் இணைந்து இஸ்‌ரேலுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதைத் தடுக்க இஸ்‌ரேலிய ராணுவம் காஸாவின் வடக்குப் பகுதியில் தாக்குதல்களைக் கடந்த மூன்று வாரங்களாக நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஒரு வாரத்துக்கு முன்பு ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வர் கொல்லப்பட்டார்.

இதையடுத்து, காஸாவின் வடக்குப் பகுதியில் தாக்குதல்களை இஸ்‌ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

சின்வரின் மரணம் போரை முடிவுக்குக் கொண்டு வரும் என்று அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் எதிர்பார்த்தன.

ஆனால், அதற்கு மாறாக இஸ்‌ரேல் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இஸ்‌ரேலியப் படைகள் நடத்தும் தாக்குதல்கள் காரணமாக காஸாவின் வடக்குப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளால் இயங்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அங்கிருந்து வெளியேறும்படி இஸ்‌ரேல் உத்தரவிட்டும் சில மருத்துவமனைகளிலிருந்து சுகாதார ஊழியர்கள் வெளியேற மறுத்துவிட்டனர்.

காயமடைந்தோருக்குச் செலுத்த போதுமான ரத்தம் இல்லை என்று அவர்கள் கூறினர்.

அதுமட்டுமல்லாது, மாண்டோரை அடக்கம் செய்யப் பயன்படுத்தப்படும் போர்வைகள், சவப்பெட்டிகளும் போதுமான அளவில் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

“பாலஸ்தீனர்களுக்குப் பாதுகாப்பு வழங்க இவ்வுலகம் தவறிவிட்டது. உலக நாடுகளால் எங்களுக்கு உணவு, மருந்து ஆகியவற்றை அனுப்பிவைக்க முடியவில்லை. மாண்ட பாலஸ்தீனர்களுக்காவது அவர்களை அடக்கம் செய்யத் தேவைப்படும் போர்வைகளை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்று காஸா சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டது.

Leave A Reply

Your email address will not be published.