வாக்களிக்கும் முறைமை பற்றி தெளிவுபடுத்தும் செயலமர்வு.

தபால் மூலம் வாக்களிக்கவுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு வாக்களிக்கும் முறைமை பற்றி – ஒவ்வொரு திணைக்களங்களையும் சேர்ந்த பதவிநிலை உத்தியோகத்தர் ஒருவருக்கு தெளிவுபடுத்துவதற்கான செயலமர்வு நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.15 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர், கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது செல்லுபடியற்ற வாக்குகள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகமாகக் காணப்பட்டன. ஆதலால் மாவட்ட ரீதியில் இந்த எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதால், இந்தத் தெளிவூட்டலைச் சரியாகப் பெற்று ஒவ்வொருவரும் தான் சார்ந்த திணைக்களத்தில் கடமையாற்றுகின்ற சகல உத்தியோகத்தர்களையும் அழைத்து தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் பொதுமக்களுக்கான வாக்களிப்பு முறைமை பற்றிய தெளிவுபடுத்தலானது பிரதேச செயலக ரீதியாக பிரதேச செயலர்களின் வழிகாட்டுதலில் உதவிப் பிரதேச செயலாளர், நிர்வாக கிராம அலுவலர் தலைமையில் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மூலம் கிராமங்களில் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்றும் தெரிவத்தாட்சி அலுவலரால் தெரிவிக்கப்பட்டது.

வாக்களிப்பு முறைமை பற்றி உதவித் தேர்தல் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ்ஜும் விளக்கமளித்தார்.

மேலும் காணொளி மூலமும் காட்சிப்படுத்தி விளக்கமளிக்கப்பட்டது.

இந்தச் செயலமர்வில் ஒவ்வொரு திணைக்களங்களில் இருந்தும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.