குடும்ப வன்முறைக்கான காரணமும் தீர்வும்! – கோதை
குடும்ப வன்முறைக்கான காரணமும் தீர்வும்! – கோதை
பாகம் மூன்று
வீட்டு வன்முறை அல்லது குடும்ப வன்முறையின் தொடர்ச்சியாக இந்தப் பாகம் மூன்றில் இந்தியாவிலிருந்து எனது தோழி ஜோசப்பின் தனது கருத்துக்களையும் தீர்வையும் அழகாக இங்கு பதிவு செய்கிறார்.
இலங்கையிலிருந்து வீட்டு வன்முறை பற்றிய
உங்கள் கருத்துக்களையும் ஆக்கங்களையும் எமக்கு அனுப்பி வைக்கலாம்.
ceylonmirro@gmail.com
குடும்ப வன்முறைக்கான காரணமும் தீர்வும்!
– ஜோஸப்பின்
குடும்ப வன்முறை என்பது பெண்களுக்கு எதிராக பார்க்கப்படுவது போலவே குடும்ப வன்முறை சட்டங்கள் ஆண்களுக்கு எதிரானதாகவும் உள்ளது என அச்சம் தெரிவிக்கின்றனர். குடும்ப வன்முறை என்பது ஆண் குடும்பத்தில் இருந்து பெண்கள் எதிர் கொள்ளும் வன்கொடுமை என்று சட்டத்தால் குறிப்பிட்டிருந்தாலும் குடும்ப வன்முறையில் ஆணும் பெண்ணும் ஒரே போல் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்பதை மறுக்க இயலாது.
குடும்ப வன்முறையை உடல் சார்ந்த வன்கொடுமை, உளவில் சார்ந்த வன்கொடுமை, நிதி சார்ந்த வன்கொடுமை என மூன்றாகப் பிரிக்கலாம்.
உடல் வன்கொடுமை
திருமணம் முடித்து கொண்டு வரும் பெண்ணை அவள் உடலை தனது உடமையாக பாவிக்கும் மனநிலை ஆண்கள் குடும்பங்களில் உள்ளது. திருமணம் என்பதை இரு நபர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு என நம்பாது ஆண்கள் பெற்றோரை கவனித்து கொள்ள, தனக்கு வாரிசு உருவாக்கி தர, தனக்கு பணிவிடை செய்து தர, வீட்டு வேலைகளை கவனித்து கொள்ள ஊதியம் இல்லா நபர்கள் என்று நினைத்து கொள்கிறார்கள். இந்த சூழலில் மனைவியாக வரும் பெண்னிடம் தனக்கு ஒவ்வாத குணம் இருந்தால் அவர்களை அடித்து திருத்த தனக்கு அதிகாரம் உண்டு என்றும் நினைத்து கொள்வது ஒரு பொது மனச் சூழலாகும். மனைவியை, கணவர் அடிப்பதை மிகவும் சகஜமாக காணும் மனநிலையை ஆண்கள் வைத்துள்ளனர். அந்த மனநிலையில் வளர்த்தும் வருகின்றனர். அடி மட்டுமல்ல பெண் உடலை ஒரு இயந்திரமாக பாவித்து தனது கோபத்தை, தனது இச்சையை தீர்க்கும் கருவியாக பாவிக்கும் அவலமும் நடந்து வருகிறது.
பல திருமணமான பெண்கள் கருக்கலப்பிற்கு இலகுவாக உள்ளாகப்படுகின்றனர். குடி வெறியில் போதை வஸ்து பாவித்த நிலையில் உடனே தனக்கான இன்பம் பெற்றே தீர வேண்டும் என்ற அவசரத்தில் பெண்ணின் உடல் நலனை பற்றி அக்கறை கொள்ளாது தவறாக பாவித்து பல நோய்களுக்கு உள்ளாக்குகின்றனர். கருக்கலப்பு, பிரசவம் போன்றவற்ற பெண்கள் உடல் நலத்துடன் பொருத்திப் பார்க்காது வெறும் உடல் இச்சையுடனும் குடும்பம் என்றால் இது சாதாரணம் என்றும் மட்டுமே பார்க்கப்படுகிறது. பல திருமணம் ஆன பெண்கள் எளிதில் சிறுநீர் தொற்றுக்கு உள்ளாகின்றனர். இதை பற்றி ஆண்கள் கவலை கொள்வதே இல்லை. பெண் உடல் என்பதின் மென்மையான நிலையை புரிந்து கொள்ளாது பாலியல் பற்றிய, பெண் உடலின் இயக்கத்தை பற்றிய போதிய அறிவு இல்லாததால் பல ஆண்கள், பெண்களை தகுந்த தயாரெடுப்பிற்கு முன்னரேயே தன் விருப்பத்திற்காக ஒரு அச்சுறுத்தலை கொடுத்து வருகின்றனர்.
பல ஆண்கள் பாலியல் இன்பத்தை பெண்கள் உடலால் தரும் இன்பமாக தவறாக புரிந்து கொள்கின்றனர். இரு மனங்கள் அன்பால், தங்களுக்குள் இருக்கும் அன்னியோன்னியத்தால் நெருங்கும் சூழலில் கிடைக்கும் ஒரு உணர்வாக புரிந்து கொள்ளாது பெண் உடலில் இருந்து கிடைக்கும் ஒரு அபூர்வமான இன்பமாக கருதிக் கொண்டு விருப்பம் இல்லாதே சுமையாக வாழ முற்படுகின்றனர். பெண் மனது மகிழ்ச்சியாகாது அவளால் பாலியல் உறவில் மனமுவந்து ஈடுபடவோ, ஆண் பெண் விரும்பும் உச்சத்தை தொடவோ இயலாது என்ற புரிதல் பெரும்பாலான ஆண்களுக்கு இருப்பதில்லை. பல நேரங்களில் குடும்ப கலவரத்தின் ஆதாரம் படுக்கை அறையில் ஆரம்பித்து, அடி தடியாக தெருவிற்கு வந்து சேர்வதையும் இவர்கள் புரிந்து கொள்வதில்லை.
ஆணும் பெண்ணும் திருமணம் என்பதை ஒரு கலாசார நிகழ்வாக அல்லது சமூக கட்டாயமாக பார்க்காது இரு மனிதர்களின் சேர்ந்து வாழும் ஒப்பந்தமாக பார்க்க வேண்டிய முக்கியத்துவத்தையும் உணர வேண்டியது அவசியமாகும். இந்த ஒப்பந்ததின் கூறாக உண்மை, நம்பிக்கை, இரு பக்க நலன், நல்லுறவு, மிகவும் முக்கியமாக இருவரும் மற்றொருவரை மதிக்கும் பண்பு இருக்க வேண்டியது அவசியமாகும். பல ஆண்களும் பெண்களும் காதலிப்பது வரை மகிழ்ச்சியாக இருந்து விட்டு திருமணம் என்றதும் நினைத்த மகிழ்ச்சி இல்லை என ஏமாறுவதாக புலம்புவது உண்டு. அதன் முக்கிய காரணம் ஒரு ஒப்பந்ததில் இருக்க வேண்டிய உண்மை, நம்பிக்கையை பேண பலர் தவறி விடுகின்றனர். நம்பகத்தன்மையை இழப்பதால் குடும்ப வாழ்க்கை விரிசலில் ஆரம்பித்து இரு பக்கவும் தங்களை மாறி மாறி காயப்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கின்றனர். எல்லா ஒப்பந்ததிலும் இருப்பது போல் ஒருவர் நலனை இன்னொருவர் பேணும் மனநிலையின் இல்லாமை பல மனமுறிவிற்கு காரணமாகிறது.
தமிழ் ஆண்கள் காலா காலாமாக தங்களுக்குள் பேணும் மரபணு ஆதிக்கத்தால், ஆதிக்க மனப்பான்மையால் பெண்கள் மனநிலையை புரிந்து கொள்ள முயல்வது இல்லை. தீர்வென திருமணத்திற்கு வெளியே உள்ள உறவுகளை பேண துவங்குகின்றனர். 50 வருடங்களுக்கு முன் வீட்டின் அகத்தில் இருந்த பெண்ணுக்கு இது போன்ற ஆண்கள் நடவடிக்கையை தெரிந்து கொள்ளும் சூழல் இருந்தது இல்லை ஆனால் தற்கால பெண்கள்; தாங்களும் வேலைக்கு போகும் நிலையில் தானும் பொதுவெளியில் பழகும் சூழல் இருப்பதால், தனது இணை திருமணத்திற்கு வெளியே உறவை தேடுவது போலவே பெண்ணும் தேடும் வாய்ப்பு பெருகி உள்ளது. இதன் அடிப்படை இருவருக்கும் மற்றவர்மேல் இருக்கும் நம்பகத்தன்மை நேர்மை இல்லாத சூழலே. இந்த சூழலும் குடும்ப வன்முறைக்கு வழி அமைக்கிறது. குடும்ப வன்முறையில் ஆண் பெண்ணை உடலால் துன்புறுத்தும் செய்திகள் அறிந்து வருகிறோம். அதே போன்று குடும்ப வன்கொடுமையில் சிக்கிய பெண்களும் தான் பெற்ற குழந்தைகளை, கணவரை, கணவர் குடுமபத்தாரை கொலை செய்யும் கட்டத்தையும் எட்டியுள்ளனர்.
இதற்கு தீர்வு தான் என்ன?
திருமண ஒப்பந்ததை மதித்து, சட்டப்படியான ஒப்பந்தமாக பார்க்க விளைவது ஆகும். ஒரு ஒப்பந்தங்களில் இருக்க வேண்டிய நேர்மையும் நாணயமும் பேணுவது அவசியம் ஆகும். ஒரு வேளை உண்மையை பேண இயலாத சூழலில் இருவரும் மனமொத்து பிரிந்து அவரவர் வாழ்க்கையை செம்மையாக பார்த்து கொள்வது நாகரீக வாழ்வின் துவக்கமாகும்.
இங்கு தான் தமிழர் மத்தியில் பண்பாடு கலாச்சாரம் என்ற பெயரில் பல முட்டுக்கட்டைகள் எழுகிறது. சமூகத்திற்காக, குழந்தைகளுக்காக வாழ்கிறோம் என ஒரே வீட்டில் மனமில்லாது மாறி மாறி நெருடலுடன் வாழ்வது, வஞ்சம் வளர்ப்பது, பிள்ளைகளை வைத்து பழி வாங்க நினைப்பது ஒருவர் மற்றவரை தூஷணத்தால் காயப்படுத்த முயல்வது, அவதூறு பரப்புவது என பண்பற்ற மனிதநேயமற்ற செயல்களில் இறங்குகின்றனர்.
இரு நபர்கள் பிரிய வேண்டும் என்று முடிவு எடுத்த பின்பு சட்டமோ, பெற்றோர்களோ குடும்பமோ, சமூகமோ அவர்கள் சேர்ந்து இருக்க செய்வது வன்முறையாகும். கடந்த கால சூழலை நினைத்து நினைத்து மனதை புழுங்கி கொண்டிருக்காது அவரவர் வாழ்க்கையை நியாயமாக தேர்ந்து விலகுதல் நன்மை தான் விளைவிக்கும். பல போதும் பிள்ளைகள் பொறுப்பு தாய்க்கு என்ற எழுதப்படாத சட்டமாக உள்ளது. குழந்தைகள் இருவருக்கும் பொது என்பதால் குழந்தைகள் பொறுப்பை, கடமையை இருவரும் சமமாக பங்கிட்டு கொள்ளலாம்.
இதில் மனம் சொல்லும் உணர்விற்கு இடம் கொடுக்காது அறிவான முடிவிற்கு இடம் கொடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது. பிள்ளைளுக்குப் புரிய வைத்து பிள்ளைகள் கடமைகளை பெற்றோர்களாக பங்கிட்டு கொள்ளுதல், இருவரும் நண்பர்களாக பிரிதல், ஒருவர் ஒருவருக்கு பொறாமை மனநிலையில் அச்சுறுத்தல் கொடுக்காது நட்பாக பிரிதல் அவசியமாகும்.
குடும்ப வன்முறையின் ஆணிவேர் திருமணம் என நினைத்து கொண்டிருக்கிறோம். பல நேரங்களில் அதன் ஆதாரம், ஆணி வேர் இரு நபர்களின் பெற்றோர்களே. தமிழ் கலாச்சாரப்படி தங்களது பிள்ளைகளுக்காக துணையை பெற்றோர்களே தேர்ந்து கொடுப்பதை கடமையாக வைத்துள்ளனர். பிள்ளைகள் இந்த உலகிற்கு வர பெற்றோர்கள் ஒரு காரணமாக இருந்தாலும் பிள்ளைகளின் முதலாளிகள் பெற்றோரல்ல என்ற புரிதல் அவசியம் ஆகும். தனக்கு தேவையான துணையை தேடும் அறிவை பிள்ளைகளுக்குக் கொடுத்து வளர்த்தெடுப்பதே தீர்வாகும்.
வயதில் பெரியவர்கள் என்ற நிலையில் தீர்மானங்கள் எடுப்பதில் உதவலாம், தீர்மானிப்பது, இணைதேடிக்கொடுப்பது பெற்றோரல்ல, பெற்றோர் கடமையும் அல்ல. திருமணம் என்பது ஒரு பாரிய சமூக பொறுப்பாகும். தனி மனித விருப்பம் சார்ந்த வாழ்க்கையாகும். அங்கும் வாழப்போகிறவர்களுக்கு தான் தெரியும் யார் தங்களுக்கான துணை என்று. பல போதும் இணைக்கான தகுதியாக அழகு, சொத்து, வேலை போன்றவை பார்க்கப்டுகிறது. இரு நபர்களின் மனதிற்கு பிடித்துள்ளதா என் யாரும் சிந்திப்பது இல்லை. தொடக்கமே தவறாக இருக்கும் போது முடிவை நாம் சரியாக எதிர் பார்க்க இயலாது.
குடும்ப வன்முறைக்கு சட்ட உதவி கடைசி உதவியாகத்தான் இருக்க வேண்டும். சட்டத்தால் இரு மனங்களை ஒட்டவோ சேர்க்கவோ இயலாது. குடும்ப வன்முறை ஒழிக்க வேண்டும் எனில் ஆளுமையான மனிதர்கள் தங்கள் துணையை சுயமாக தேடும் அறிவும் தகுதியும் வளர்த்தி இருக்க வேண்டும். வாழ முடிவெடுத்த பின் எந்த காரணம் கொண்டும் கைவிடாத நேர்மையான நிலையான மனநிலை தான் இங்கு அவசியம். பலர் திருமணம் என்ற பந்ததை யாருக்கோ உதவுவற்தாக, அல்லது வாழ்க்கை கொடுப்பதற்காக என நினைத்து கொள்கின்றனர். திருமண பந்ததில் யாரும் யாருக்கும் வாழ்க்கையை கொடுக்க இயலாது. இருவரும் சேர்ந்து மனமொத்து வாழ மட்டுமே இயலும்.