சட்டவிரோத இஸ்ரேலிய, ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளைக் கண்டறியும் நடவடிக்கை தயாராகிறது
நாட்டில் விசா காலத்தை மீறி தங்கியிருக்கும் ரஷ்ய, உக்ரைன் மற்றும் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை கண்டுபிடித்து அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை ஆரம்பிக்க குடிவரவு திணைக்களம் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து செய்தி வெளியிடும் டெய்லி மிரர் நாளிதழ், அடுத்த மாதம் (நவம்பர்) தொடக்கத்தில் இருந்து இந்த நடவடிக்கையை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறுகிறது. குறிப்பாக தென் கரையோரங்களில் இவ்வாறான சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் இந்த அதிகாரிகள் அவதானமாக செயற்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
தென் கடற்கரைக்கான சுற்றுலாப் பருவம் நவம்பரில் தொடங்கி மார்ச் மற்றும் ஏப்ரல் வரை நீடிக்கும். அந்த காலக்கட்டத்தில் மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளில் இருந்தும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வழக்கமாக நவம்பர் முதல் ஏப்ரல் வரை மற்றும் மே முதல் செப்டம்பர் வரை முறையே தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரைகளில் சிறப்பு கண்காணிப்பு சுற்றுப்பயணங்கள் நடத்தப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.
இந்த நாட்டிற்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் 30 நாள் சுற்றுலா விசாவைப் பெறுகிறார்கள், மேலும் விசா காலாவதியான பிறகு, சில சுற்றுலாப் பயணிகள் நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கிறார்கள், ஆனால் சுற்றுலாப் பயணிகள் அத்தகைய செல்லுபடியாகும் விசா இல்லாமல் இலங்கையில் தங்குவதை அவதானிக்க முடிகிறது.
திணைக்கள அதிகாரிகள் மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் அருகம்பே உட்பட கிழக்கு கடற்கரைக்கு விஜயம் செய்ததாகவும், ஆனால் இஸ்ரேலிய பிரஜைகள் உட்பட சுற்றுலா பயணிகளை கைது செய்ய முடியவில்லை என்றும் குடிவரவு அதிகாரி கூறினார்.