நஸீர்: திரைவிமர்சனம்
எல்லோரும் பார்க்க வேண்டிய திரைப்படம் இது.
அரசியல், குறிப்பிட்ட எந்த கொள்கையிலும் ஈடுபடாத, ஒரு குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலையிலிருக்கும் ஒரு சாதாரண மனிதர் மதவாத அரசியலில் பலியாகும் கதையே இது.
காலைப் பொழுது விடிவது முதல் கதிரவன் மறையும் வரை மும்மரமாக ஒரு ஜவுளிக்கடையில் வேலைபார்க்கும் ஒழுக்கமான ஓர் உழைப்பாளி, பல நல்ல நண்பர்களை கொண்டுள்ள ஒரு கவிஞர். பள்ளி மாணவரான கடை முதலாளியின் மகனிடம் மட்டுமல்ல கடை முதலாளியின் தந்தையிடமும் அன்பு பாராட்ட தெரிந்த மனிதர். அன்பான கணவர், பொறுப்பான அப்பா, பாசமான மகன் இப்படி எல்லாம் வாழ்ந்த மனிதர் இந்திய மத வன்முறையால் கொல்லப்படுகிறார்.
ஒரு இந்து முதலாளியின் கடையில் விற்பனைப் பிரிவில் வேலை பார்க்கிறார் நஸீர். கடையை திறந்து இந்து சாமியை அலங்கரிப்பது முதல் கடையை மூடும் வரை வேலை செய்து வருகிறார் நஸீர். கடை முதலாளியின் மதத் துவேஷத்தையும் அமைதியாக எதிர் கொண்டு தன்னோடு வேலை செய்யும் சக கடைத் தோழர்களிடமும் பண்பாக பழகும் நசீர் , வாய்ச்சண்டைக்கோ, கசமுசா வம்பிற்கோ போகாத நபர்.
சிலரின் சுயநலமான தீவிரவாத கொள்கைகள், சாதாரண மனிதர்களின் வாழ்க்கையில் நிகழ்த்தும் வன்முறையால், எதிர் கொள்ள வேண்டி வந்த துயரை சொல்லிச் சென்ற திரைப்படம் நஸீர். பல தரப்பட்ட கலாச்சார, மத பண்பாட்டு சூழலில் வாழும் மனிதர்களின் வாழ்வில் , எவ்விதமாக , அடிப்படைவாத அரசியல் தீங்கு விளைவிக்கிறது என்பதைச் சொல்லியுள்ளது நசீர் திரைப்படம்.
ஒற்றைவாத அரசியல் கொள்கைகள் சமூகத்திற்கு செய்யும் மோசமான தாக்கத்தை கூறிய திரைப்படம். மனிதத்தை விடுத்து, மனிதர்கள் மதங்களாகவும் , இனமாகவும் தெரியும் போது ஒரு மனிதன் எவ்விதம் இன்னொரு மனிதனால் வேட்டையாடப்படுகிறான் என ஆணித்தரமாக சொல்லியுள்ளது.
ஒரு மனிதனின் மரணம் , அவனை சார்ந்து இருக்கும் மனிதர்களின் சின்ன சின்ன ஆசைகளை மட்டுமல்ல , அவனுடைய தாயின் இருப்பை, மனைவியின் துணையை, மகனின் நம்பிக்கையை இல்லாதாக்குகிறது என்று தனது படைப்பின் ஊடாக ஆணித்தரமாக பார்வையாளர்களின் மனதில் பதிய வைத்துள்ளார் இயக்குனர்.
இயக்குனர் கார்த்திக்கின் இரண்டாவது திரைப்படம் இது. கோயம்பதூரை பிறப்பிடமாக கொண்ட அருண் கார்த்திக்க்கின் திரைக்கதை, இயக்கத்தில் இப்படம் வந்துள்ளது. தமிழ் எழுத்தாளர் திலிப் குமாரின் சிறுகதையை மைய்யமாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு பின்னால் ஒளிந்து கிடக்கும் வன்மத்தை சரியான முறையில் வெளிப்படுத்தியுள்ளார்.
ஒளிப்பதிவை சௌம்யானந்த் சகி செய்துள்ளார். படத்தொகுப்பு ஆர்கய பாசு. பிரதான கதாப்பாத்திரங்களில் ஜென்சன் திவாகர், பாக்கியம் சங்கர், சுதா ரங்கநாதன், யாஸ்மின் ரக்மான், சபரி, ராஜேஷ் போன்றோர் நடித்துள்ளனர்.
காமிரா கோணம், அதன் பின்னனி இசை, படத்தில் பயண்படுத்தியிருக்கும் வண்ணம் என , ஒளிப்பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது. திரைக்கதை மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. திரைவசனங்கள் மிகக்குறைவாக கதையை முன்நோக்கி விருவிருப்பாக நகர்த்தும் படி உள்ளது. ஒவ்வொரு காட்சியும் கதை சொல்கிறது. கணவர் – மனைவி அன்னியோன்னியம் அவர்களின் சின்ன சின்ன அன்பும், ஆசைகளும் , இவற்றால் காட்சி மொழியில் அழகாக மிகவும் துல்லியமாக பதிவு செய்துள்ளார் இயக்குனர். இத் திரைப்படத்தை stray பேக்டரி, ரிங்கில் பிலிம், மேஜிக் ஹௌர் பிலிம்ஸ், அன்கோம் புத்தா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
பரப்புரை போன்றோ, சமூக விளக்கம் போன்றோ, விழிப்புணர்வு போன்றோ இல்லாமல், ஆவேச கோஷங்களை எல்லாம் தவிர்த்து, நல்ல கதையை தேர்ந்தெடுத்து அதை மக்கள் புரியும் விதத்தில் , சிந்திக்க தூண்டும் விதமாக சிறப்பாக படமாக்கியுள்ளார். கதையின் போக்கில் அதன் கையாளுதலும் ஒவ்வொரு கட்டத்திலுமுள்ள பரபரப்பும் , மிகவும் சிறப்பாக வந்துள்ளது. மிக எளிமையாக , ஆனால் மிகவும் முக்கியமான கருத்தாக்கத்தில் நின்றுகொண்டு உலகலாவிய அரசியலை பேசிய திரைப்படம் இது. திரைப்படம் என்ற ஊடகம் செலுத்தும் வலுவை தெரிந்து கொண்டு, சினிமா என்ற ஊடகத்தை மிகவும் கவித்துவமாக வெளிப்படுத்திய சமகாலத்திற்கு மிகவும் அவசியமான திரைப்படம் இது.
சர்வதேச விருதுகள் பல பெற்றுள்ளது இத்திரைப்படம். ரஷிய அரசின் 14 வது ஆண்டரி தர்கோவெஸ்கி செல்காலோ விருது, உலகளவில் பிரான்ஸ் யுனெஸ்கோ வழிநடத்துதலில் தில்லியில் நடக்கக்கூடிய சர்வதேச திரைப்பட விழாவில் 29 நாடுகள் உறுப்பினர்களாகவுள்ள நெட்பாக் (Network for the Promotion of Asian Cinema) அமைப்பின் சார்பாக சிறந்த ஆசிய திரைப்பட விருதை பெற்றுள்ளது. சர்வ்தேச திரைப்பட விழாவில் ’கிரான்று பிரிக்ஸ்’ விருது கிடைத்துள்ளது. மேலும் ரோட்டர்டாமில் நடந்த இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் மிகவும் மதிப்பிற்கூறிய டைகர் அவார்ட் அளிக்கப்பட்டது. அந்த அவார்டிற்காக உலகளவில் வெளிந்த பத்து தரமானத் திரைப்படங்களுக்கு விருது மற்றும் 40000 டாலர்கள் பரிசாக அளிக்கப்பட்டது. இந்த விருது பெர்லின் மற்றும் கேன்ஸ் விருதை விடவும் முக்கியமான விருதாகும்.
தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் திரையுலகில் சாதனை புரிந்து சர்வதேச அளவில் இந்திய திரைப்படங்களுக்கு அடையாளமாக இருப்பது பெருமையாக உள்ளது. ஆக்கபூர்வமான படங்களுக்கு பல வெற்றிகள் சூட இயக்குனருக்கும், திரைப்பட குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.
எழுத்து: ஆலா