அமெரிக்க மாநிலத்தில் தீபாவளி விடுமுறை
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலம் தீபாவளி பண்டிகையை அரசு விடுமுறையாக அறிவித்து உள்ளது. அதற்கான உத்தரவில் மாநில ஆளுநர் ஜோஷ் ஷேபிரோ கையெழுத்திட்டு உள்ளார்.
மாநிலத்தின் பல இன மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் பென்சில்வேனியாவில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை அன்றைய தினம் மூடவேண்டிய அவசியமில்லை என்று ஆளுநர் அலுவலக அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த விடுமுறை, தீபாவளிப் பண்டிகையின் கலாசார முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதுடன் வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட மாநில மக்கள் அனைவரையும் கொண்டாட்டங்களில் பங்கேற்க ஊக்குவிக்கிறது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்கர்களுடன் இந்துக்கள், சீக்கிய, சமண, பௌத்த சமயத்தவரையும் உள்ளடக்கிய பலதரப்பட்ட மக்கள் வாழும் மாநிலம் பென்சில்வேனியா என்பது குறிப்பிடத்தக்கது.