தவெக மாநாடு: வெய்யிலையும் பொருட்படுத்தாது குவியும் தொண்டர்கள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டையொட்டி அதிகாலை முதலே தொண்டர்கள் வரத் தொடங்கினர்.

வி.சாலை அருகே நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், தொண்டர்கள் வெய்யிலையும் பொருட்படுத்தாது நடந்து செல்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி. சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை (அக். 27) நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டுப் பகுதிக்கு காலை முதல் கட்சியினர் குவியத் தொடங்கினர்.

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழக மாநாடு அக்டோபர் 27-ஆம் தேதி வி. சாலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, 85 ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதற்காக அக்டோபர் 4-ஆம் தேதி பந்தக்கால் நடப்பட்டு, மாநாட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை முகப்பு வாயில் அமைக்கப்பட்டது. மேலும் 100 அடி உயரத்தில் கொடிக் கம்பம் நிறுவப்பட்டது.

அதிகாலை முதல் வரத் தொடங்கிய தொண்டர்கள்: மாநாடு மாலையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டாலும், மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஞாயிற்றுக் கிழமை அதிகாலை முதலே கட்சித் தொண்டர்கள் வரத் தொடங்கினர்.

காலை 9 மணிக்கு மேல் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது. மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் அதிகரிக்கத் தொடங்கி விட்டன. அதே நேரத்தில் பொதுபோக்குவரத்து மாற்றம் செய்யப்படவில்லை. பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் வழக்கம் போல இயங்கின.

சாலையின் இரு பகுதியிலும் தடுப்பு: மாநாட்டுக்கு வரும் கட்சியினர் தொண்டர்கள் சாலையோரத்தில் வந்து செல்லும் வகையில் இருபுறத்திலும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

போக்குவரத்து நெரிசல் காரணமாக கட்சி மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள், கட்சியினர் நீண்ட தொலைவுக்கு நடந்து சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.