பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் கோடிக்கணக்கான சிறார்கள் :சுவிசிலிருந்து சண் தவராஜா
யுத்தத்தில் முதலில் பலியாவது உண்மை என்றொரு பிரபலமான வாசகம் உள்ளது. அதேபோன்று உலகில் எங்கு போர் நடந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளுமே என்பதுவும் கசப்பான உண்மை. போர்களின் போது மட்டும் என்றில்லாமல் அன்றாட வாழ்க்கையிலும் பெண்களும் குழந்தைகளுமே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை தினசரி செய்திகள் வாயிலாக அறியக் கிடைக்கின்றது. எந்தக் கண்டம், எந்த நாடு, எந்தத் தேசம் என்றில்லாமல் உலகம் முழுவதும் பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான பாதிப்பு பல வழிகளிலும் தொடரவே செய்கின்றது.
ஆண் மைய உலகில் பெண்களுக்கான இடம் என்பது இரண்டாம் நிலையிலேயே உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. குடும்பம் முதல் சமூகம் வரை அதன் விளைவுகளைப் பார்க்க முடிகின்றது. பெண்களைப் பாலியல் பண்டங்களாகப் பார்க்கும் ஆண்களின் மனோபாவம், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவர்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதற்கான உந்துதலை வழங்குகின்றது. இது போர்ப் பிரதேசங்களில் சற்று அதிகமாகவே நிகழ்கின்றது. பெண்கள் உட்பட அனைவரையும் பாதுகாக்கும் கடமையில் உள்ள படையினரும், காவலர்களும் கூட இது விடயத்தில் விதிவிலக்கு அற்றவர்கள் என்கின்றன புள்ளி விபரங்கள்.
ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (யுனிசெப்) அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்று, உலகெங்கும் 370 மில்லியன் சிறுமிகள் 18 வயது நிரம்புவதற்குள் பாலியல் வன்முறையை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளது. இதனை வேறு விதமாகக் கூறுவதானால் உலகில் வாழும் எட்டில் ஒரு சிறுமியர் தமது வாழ்நாளில் பாலியல் பலாத்காரம் மற்றும் வன்முறையைச் சந்திக்க வேண்டி உள்ளது. ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள உப சகாராப் பிராந்திய நாடுகளில் உள்ள சிறுமியரே உலகில் அதிக எண்ணிக்கையில் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள் என்கிறது இந்த அறிக்கை. ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள மேற்கு ஆபிரிக்க நாடுகள் தவிர்ந்த 48 நாடுகள் இந்த உப சகாராப் பிராந்தியத்தில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
உப சகாராப் பிராந்தியத்தில் வாழும் 79 மில்லியன் சிறுமியர் 18 வயது நிரம்புவதற்கிடையில் பாலியல் பலாத்காரத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனை வேறு விதத்தில் கூறுவதானால் அந்தப் பிராந்தியத்தில் வாழும் ஐந்தில் ஒரு சிறுமியர் பலாத்காரத்துக்கு ஆளாகின்றனர். தொடரும் ஆயுத மோதல்கள், அதனால் உருவாகும் பாதுகாப்பற்ற சூழல் போன்றவை இத்தகைய அவல நிலைக்குக் காரணம் என்கிறது ஆய்வு.
இத்தகைய பாதிப்புக்கு ஆளான சிறுமிகள் தமது வாழ்நாள் முழுவதும் தமக்கு நடந்த துன்பத்தை மறக்க முடியாமல், அந்த அவலத்தைச் சுமந்தவாறே வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அந்த அவலம் ஏற்படுத்திய வடு அவர்கள் தமது வாழ்க்கையை இயல்பாக வாழ முடியாதவர்களாக அவர்களை ஆக்கி வைக்கிறது. தமது கல்வியைத் தொடர முடியாமல், எதிர்காலத்தில் ஒரு குடும்ப வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க முடியாதவர்களாக, அவ்வாறு குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொண்டாலும் காலம் முழுவதும் நிம்மதியாக வாழ முடியாதவர்களாக அவர்களை அலைக்கழிக்கின்றது. ஒரு சிலர் போதைப் பழக்கத்துக்கு ஆளாகி தமது வாழ்வைப் பாழாக்கிக் கொள்கின்றனர்.
அவர்களது அவலத்துக்கு யார் பொறுப்பேற்பது? இது ஒட்டுமொத்த மானுட சமூகத்தின் முன்னாலும் வைக்கப்படும் கேள்வி.
இயற்கையின் குழந்தைகளான மனிதர்கள் பிறக்கும் போது அனைவரும் சமமானவர்களாகவே உள்ளனர். ஆனால் அவர்கள் வாழுகின்ற சமூகம் ஏற்றத் தாழ்வு மிக்கதாக, கல்வியறிவு குறைந்ததாக, பொருளாதார அடிப்படையில் வஞ்சிக்கப்பட்டதாக, நாகரிக வளர்ச்சி குன்றியதாக, வன்முறைச் சூழல் நிரம்பியதாக, சட்டத்தின் ஆட்சி அற்றதாக இருக்கையில் அங்கே மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பொருளாதார அடிப்படையில் வளர்ச்சி கண்ட, நாகரிகத்தின் உச்சியில் வாழ்வதாகப் பெருமை பேசிக் கொள்ளும் மேற்குலகில் கூட பெண்கள் பாலியல் அடிப்படையில் துன்புறுத்தலுக்கு ஆளாவது தொடரவே செய்கின்றது.
உடல் ரீதியான துன்புறுத்தல்கள் மட்டுமன்றி நவீன உலகில் இணைய வழிகளிலும், வாய்ச்சொல் மூலமான தாக்குதல்களுக்கு ஆளாவதாலும் கூட பெண்கள் வன்முறையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குடும்பங்களில் தங்கள் இணையர்களாலும், தங்கள் காதலர்களாலும் கூட பெண்கள் ஒரு கட்டத்தில் இத்தகைய வன்முறைக்கு ஆளாகும் செய்திகளை நாம் அன்றாடம் அறிகிறோம். பெண்களுக்கு எதிரான இத்தகைய வன்முறைகளையும் கணக்கிடும் போது உலகில் 650 மில்லியன் பெண்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்கிறது யுனிசெப் அறிக்கை. இதனை வேறு வழியில் சொல்வதானால் உலகின் வாழும் பெண்களில் ஐவரில் ஒருவர் ஏதோ ஒரு வகையில் பாலியல் அடிப்படையில் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.
இவ்வாறு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது பெண்கள் மாத்திரமல்ல. 240 முதல் 310 மில்லியன் வரையான சிறுவர்களும் ஆண்களும் கூட தங்கள் சிறு பராயத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் நிலை உள்ளது என்கிறது இந்த அறிக்கை. ஏனைய உடல் ரீதியற்ற பாலியல் சுரண்டல்களையும் இணைத்துப் பார்த்தால் 410 முதல் 530 மில்லியன் வரையான சிறுவர்களும் ஆண்களும் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்கிறது இந்த அறிக்கை.
“சிறார்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் போக்கு எமது மனச்சாட்சியில் ஒரு கறையாக உள்ளது” என்கிறார் யுனிசெப் நிறைவேற்றுப் பணிப்பாளர் கத்தரின் ருசெல். “ஆயுத மோதல்கள் நிலவும் பிராந்தியங்களில் மிக மோசமான பாலியல் வன்முறைகளை அவதானிக்க முடிகின்றது. அங்கு பாலியல் பலாத்காரங்களும், பாலியல் அடிப்படையிலான வன்முறைகளும் போரின் ஒரு ஆயுதமாகப் பாவிக்கப்படுகின்றது” என்கிறார் அவர்.
யுனிசெப் அறிக்கையின் படி உப சகாராப் பிராந்தியத்தில் பாலியல் வன்முறையால் பாதிப்புக்கு ஆளாகும் சிறுமியரதும் பெண்களதும் எண்ணிக்கை 79 மில்லியன். இது மொத்த மக்கட்தொகையில் 22 விழுக்காடாக உள்ளது. இதுவே கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியங்களில் 75 மில்லியனாக உள்ளது (8 விழுக்காடு). மத்திய மற்றும் தெற்காசியப் பிராந்தியத்தில் 73 மில்லியன் (9 விழுக்காடு). ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் 68 மில்லியன் (14 விழுக்காடு). லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்தில் 45 மில்லியன் (18 விழுக்காடு). வட ஆபிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவில் 29 மில்லியன் (15 விழுக்காடு). ஓசியானியாப் பிராந்தியத்தில் 6 மில்லியன் (34 விழுக்காடு) என நீள்கிறது அறிக்கை.
பொதுவாக 14 முதல் 17 வயது வரையான சிறுமியரே அதிகம் பாதிக்கப்படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது. ஆய்வுத் தகவல்களின் படி இந்தச் சிறுமியர் மீண்டும் மீண்டும் பலாத்காரத்துக்கு ஆளாகும் நிலை உள்ளது.
கிடைக்கின்ற தகவல்களின் பிரகாரம் முதல் தடவையாக இந்த அறிக்கையை யுனிசெப் தயாரித்துள்ளது. ஆனால், பாதிக்கப்படும் சிறுமியரின் எண்ணிக்கை இதனைவிடவும் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்பதே யதர்த்தம். ஆய்வு முறையில் இயல்பாக ஏற்படும் வழுக்கள் ஒருபுறம் இருக்க, ஒருசில நாடுகள் முறையான தகவல்களைப் பேணுவதும் இல்லை, அவற்றை வெளியிட முன்வருவதும் இல்லை என்பது அறிந்ததே.
மானுட சமூகமே வெட்கப்பட வேண்டிய தகவல் இது.
யுனிசெப் தயாரித்துள்ள அறிக்கை அடுத்த மாதம் கொலம்பியாவில் நடைபெறவுள்ள சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பிலான அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
போதிய விழிப்புணர்வு, தமது இழைக்கப்படும் அநீதியை சமூகத்தின் பழிச்சொல்லைப் பொருட்படுத்தாமல் முறையிடக் கூடிய சூழல், இறுக்கமான சட்டவாட்சி, விரைவான நீதி உள்ளிட்ட பல அம்சங்கள் இதுபோன்ற குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு முன் நிபந்தனைகளாகக் கொள்ளப்படக் கூடியவை.
தனித்து மாநாடுகளைக் கூட்டித் தீர்மானங்களை எடுப்பதனால் மாத்திரம் சிறார்களைப் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து காப்பாற்றிவிட முடியாது. மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்கள் முறையாக நிறைவேற்றப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அச்சமற்ற சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இவை யாவும் நடக்குமா? நடந்தால் நல்லது.