உயர்தர மாணவர்கள் அச்சமின்றி பரீட்சை நிலையங்கள் செல்லாம்
உயர்தர மாணவர்கள் அச்சமின்றி
பரீட்சை நிலையங்கள் செல்லாம்!
– இராணுவத் தளபதி அறிவிப்பு
“ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் பிரத்தியேக பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தப் பிரதேசங்களிலிருந்து யாரும் வெளியிடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே, நாட்டிலுள்ள மாணவர்கள் அச்சமின்றி பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியும்.”
– இவ்வாறு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இன்று விசேட அறிவித்தல் மூலம் இதனைத் தெரிவித்த அவர், அதில் மேலும் கூறியுள்ளதாவது:-
“சனிக்கிழமை இனங்காணப்பட்ட 105 தொற்றாளர்களில் மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் இருவர் உள்ளடங்குவதோடு ஏனையோர் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களாவர்.
இந்தநிலையில் தொற்றாளர்கள் முறையாக இனங்காணப்படுவதில்லை என்று வதந்திகள் பரப்பப்படுகின்றன. ஆடைத்தொழிற்சாலையுடன் நேரடித் தொடர்பைக் கொண்ட அனைவரும் இனங்காணப்பட்டுள்ளதோடு ஏனையோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்துள்ளதோடு ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன. ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் பிரத்தியேக பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தப் பிரதேசங்களிலிருந்து யாரும் வெளியிடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே, நாட்டிலுள்ள மாணவர்கள் அச்சமின்றி பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியும்
தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். அதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று ஊரடங்குச் சட்டத்தைத் தொடர்ந்தும் அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. காரணம் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலேயே தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்” – என்றார்.