வடக்கு, கிழக்கில் ‘சைக்கிள் சின்னம்’ 10 ஆசனங்களையாவது பெற வேண்டும் – மன்னாரில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு.

“சைக்கிள் சின்னம் இந்தத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் குறைந்தது 10 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் இடம்பெற்ற போர் முடிவடைந்து 15 வருடங்கள் கடக்கின்றன. இந்த 15 வருடங்களில் எமது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் நாளாந்தம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களின் ஒரு போராட்டத்திலாவது ஜே.வி.பி. கலந்துகொண்டுள்ளதா?
வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. அரசியல் கைதிகளின் விடுதலைக்காகப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. தனியார் காணிகள் அபகரிப்புக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட எமது மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவற்றில் ஏதாவது ஒன்றிலாவது இந்த ஜே.வி.பி. தரப்பினர் அல்லது தேசிய மக்கள் சக்தி எனக் கூறப்படுகின்றவர்கள் கலந்துகொண்டுள்ளார்களா? இல்லை.
சைக்கிள் சின்னம் இந்தத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் குறைந்தது 10 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். வன்னியில் நாங்கள் 2 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.” – என்றார்.