இலங்கையின் மொசாட் உறவு!
இஸ்ரேலியர்கள் இலங்கைக்கு வந்தது இன்று நேற்றல்ல. பிரிட்டிஷ் காலனி அரசாங்கத்தில் இஸ்ரேலியர்கள் உயர் பதவிகளை வகித்தனர்.
1948ல் சுதந்திரம் பெற்ற பிறகு டி.எஸ்.சேனநாயக்கா அரசாங்கம் தெற்காசியாவில் உள்ள ஏனைய நாடுகள் இஸ்ரேலுடன் உறவுகளை ஆரம்பிப்பது பற்றி இருமுறை யோசித்த போது, இஸ்ரேலுடன் உறவை ஆரம்பிக்க தீர்மானித்தது.
DS இன் அரசாங்கம் இஸ்ரேலிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் கப்பல்களை வாங்கியது.
பின்னர் ஆட்சிக்கு வந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் அரசாங்கமும் திருமதி பண்டாரநாயக்காவின் அரசாங்கமும் பாலஸ்தீன விடுதலை அமைப்பை ஏற்றுக்கொண்டு இஸ்ரேலுடனான உறவுகளை முறித்துக் கொண்டன.
1977ல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆரின் அரசாங்கம் மீண்டும் இஸ்ரேலுடன் உறவுகளை ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டது.
வடக்கில் போர் தொடங்கிய பின்னர், ஜே.ஆரின் அரசாங்கத்திற்கு இஸ்ரேலிய இராணுவ நிபுணர்கள் ஆதரவு மற்றும் இஸ்ரேலிய ஆயுதங்கள் தேவைப்பட்டன.
அத்துடன், பிரமாண்டமான மகாவலி திட்டத்தை ஆரம்பிப்பதற்கு அக்காலகட்டத்தில் உலகின் நம்பர் ஒன் கட்டுமான நிபுணர்களாக இருந்த இஸ்ரேலிய நிபுணர்கள் தேவைப்பட்டனர்.
இதன் விளைவாக ஜே.ஆரின் அரசாங்கம் இஸ்ரேலுக்கு இலங்கையில் ஒரு பிரிவை அமைக்க அனுமதித்தது.
பியகம சுதந்திர வர்த்தக வலயத்தின் திறப்பு விழாவிற்கு அப்போதைய கைத்தொழில் அமைச்சர் ரணில், இஸ்ரேலும் பிரதிநிதிகளை அழைத்திருந்தார். அப்போதைய இந்திய உயர் ஸ்தானிகர் தீட்சித் அமர்ந்திருந்த நாற்காலிக்கு அருகில் அவர்களும் அமர்ந்திருந்தனர்.
‘ரணில், எங்கள் புதிய நண்பர்களை தீட்சித்துக்கு அறிமுகப்படுத்துங்கள்…’ என ஜே.ஆர். ரணிலிடம் தெரிவித்தார்.
ரணில் இஸ்ரேலிய தூதுக்குழுவை தீட்சித்துக்கு அறிமுகப்படுத்தினார். தீட்சித்தின் முகம் கறுப்பாக மாறியது. அது இந்தியா இஸ்ரேலுக்கு எதிரான நாடாக இருந்த காலமாகும்.
ஜே.ஆரின் ஆலோசனையின் பேரில் ரணில் இஸ்ரேலிய பிரதிநிதிகளை இந்நிகழ்வுக்கு வரவழைத்து தமக்கு அறிமுகம் செய்து தன்னை சங்கடப்படுத்தியதாக தீட்சித் தனது ‘கொழும்பு பாத்திரம்’ எனும் நூலில் எழுதியிருந்தார்.
இலங்கை-இஸ்ரேல் உறவுகளின் ஊடாக இலங்கையில் உளவு பார்க்கும் இஸ்ரேலிய உளவுப் பிரிவான மொசாட் செயற்பாட்டை சகித்துக்கொள்ள முடியாததே இலங்கையில் இந்தியாவின் தலையீட்டிற்கு முக்கிய காரணமானது.
1988 இல் பிரேமதாச ஜனாதிபதியான பின்னர், முன்னாள் மொசாட் புலனாய்வு அதிகாரியான விக்டர் ஒஸ்ஃப்ரெஸ்கி, In By Way of Deception என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
In By Way of Deception, Victor Ostrovsky, a former Mossad officer, provides insights into various intelligence operations conducted by the Mossad. Although the book primarily focuses on his experiences within the Israeli intelligence agency, it also touches on some of the Mossad’s activities in different parts of the world, including Sri Lanka.
மொசாட் புலனாய்வுப் பிரிவினர் இலங்கைப் பொலிஸாருக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் இஸ்ரேலில் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கும் மொசாட் புலனாய்வுப் பிரிவினரால் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், போர் நடத்துவதற்கு இலங்கை ராணுவத்துக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்ட போது, அந்த ஆயுதங்களுக்கு எதிர்வினையாற்றும் வகையில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நூல் வெளிவந்த பின்னர், இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மைகள் உண்மையா இல்லையா என்பதை ஆராய பிரேமதாச ஒரு ஆணைக்குழுவை நியமித்தார். அந்த ஆணைக்குழுவுக்கு வடுகொடபிட்டிய ஆணைக்குழு எனப் பெயரிடப்பட்டது.
இலங்கையில் ஜே.ஆரின் அரசாங்கத்தின் போது லலித் அத்தலமுதலி இஸ்ரேலுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்தார். அவர் இஸ்ரேலிய பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்தார். தேசிய பாதுகாப்பு அமைச்சராக, அவர் இஸ்ரேலுடன் நெருக்கமாக இருந்தார்.
ஜே.ஆரின் ஆலோசனையின் பேரில் காமினி இஸ்ரேலை மகாவலி திட்டத்தில் ஈடுபடுத்திய காலத்தில் இஸ்ரேலும் காமினியுடன் உறவுகளை வளர்த்துக் கொண்டது. ஜே.ஆரின் மகன் ரவி ஜயவர்தன இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாட்டின் ஆலோசனையின் பேரிலேயே சிறப்பு அதிரடிப்படையை (STF)உருவாக்கினார்.
எஸ்.டி.எஃப் என்பதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சிறப்புப் படைகள் இஸ்ரேலிடம் இருந்துதான் பயிற்சி பெற்றன. ஜே.வி.பி பயங்கரவாதத்தை அடக்க ஜே.ஆர் – பிரேமதாச அரசாங்கங்கள் STFயே பயன்படுத்தியது.
இலங்கையில் இஸ்ரேலிய மொசாட் அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை வெளியானதையடுத்து இலங்கையில் இருந்த இஸ்ரேல் நலன்புரி பிரிவை மூட பிரேமதாச தீர்மானித்தார். இஸ்ரேலியர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது.
அதன் பின்னரே பிரேமதாசாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இஸ்ரேலிய ரகசிய சேவையான மொசாட் லலித் மற்றும் காமினியை பயன்படுத்தி நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்ததாக பிரேமதாசா நினைத்தார்.
நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட பிறகு, பிரேமதாசா பாராளுமன்றத்திற்கு வந்து மொசாட் உளவுத்துறையை நேரடியாக குற்றம் சாட்டினார்.
‘நான் இஸ்ரேல் நலன்புரி பிரிவை நாட்டை விட்டு வெளியேற்றினேன். அதனால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. மொசாட் எனக்கு எதிராகத் திரும்பியதில் ஆச்சரியமில்லை. இஸ்ரேலுக்குச் சென்று, அங்குள்ள பல்கலைக் கழகங்களில் படித்து, அங்குள்ள பல்கலைக் கழகங்களில் பாடம் நடத்தி, தவறாக பணம் சம்பாதித்தவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்…’ பிரேமதாச பாராளுமன்றத்தில் சொன்ன கதை இது.
பின்னர் பிரேமதாசா கொல்லப்பட்டார்.
2000 ஆம் ஆண்டு இலங்கையில் இஸ்ரேலிய பிரிவொன்றை நிறுவுவதற்கு எதிராக செயல்பட்ட சந்திரிக்காவின் அரசாங்கம் , பதவிக்கு வந்த போது இஸ்ரேலிய தூதரகம் ஒன்று திறக்கப்பட்டது. அது போருக்காக உதவி பெறவே திறக்கப்பட்டது.
2005 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த இலங்கை – பாலஸ்தீன நட்புறவு நிறுவனத்தின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் போரில் உதவி பெற இஸ்ரேலுடன் நெருக்கத்தைக் கையாண்டார். இக்காலத்தில்தான் இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலை வாய்ப்புகள் கிடைத்தது.
யுத்தத்தின் மூலம் கட்டியெழுப்பப்பட்ட உறவுகளினால் கோட்டாபயவும் இஸ்ரேலின் நண்பரானார்.
ரணில் ஜனாதிபதியான பின், செங்கடலில் ஈரானின் ஹூதி கிளர்ச்சியாளர்களை தாக்க இலங்கை ராணுவத்தை அனுப்பி இஸ்ரேலுடனான உறவை நெருக்கப்படுத்திக் கொண்டார். இதன் காரணமாக இஸ்ரேலில் இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரித்தன.
அநுர , ஜனாதிபதியான காலத்தில், ஐ.நா பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்கு வர தடை விதித்த இஸ்ரேலின் முடிவுக்கு எதிராக சிலி ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தது.
நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இதில் கையெழுத்திட்டன. அதில் இலங்கை கையெழுத்திடவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பக்கீர் மார்க்கார் அது குறித்து கேள்வி எழுப்பிய பின், இலங்கை அந்த கடிதத்தை மீண்டும் கொண்டு வந்து கையெழுத்திட்டது.
அநுரவின் அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை தெளிவாக இல்லை என்பதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது. வெளியுறவுக் கொள்கையும் பொருளாதாரமும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. வெளியுறவுக் கொள்கையுடன் விளையாடுவது பொருளாதாரத்துடனான ஆபத்தான விளையாட்டாகும்.
உபுல் ஜோசப் பெர்னாண்டோ
தமிழில் :ஜீவன்