கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவைகள் மீள ஆரம்பம்.

கொழும்பு – யாழ்ப்பாணத்துக்கான நேரடி ரயில் சேவைகள் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 5.45 மணிக்குப் புறப்பட்ட ரயில் மதியம் ஒரு மணியளவில் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையிலான ரயில் சேவைகள் உள்நாட்டுப் போர் காரணமாக வவுனியாவுடன் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

போர் மௌனிக்கப்பட்ட பின்னர் மீண்டும் 2014ஆம் ஆண்டு முதல் கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

அந்நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு வவுனியாவுக்கும் அனுராதபுரத்துக்கும் இடைப்பட்ட ரயில் பாதை புனரமைப்புப் பணிகள் காரணமாகக் கொழும்பில் இருந்து புறப்படும் ரயில்கள் அனுராதபுரத்துடனும், யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் ரயில்கள் வவுனியாவுடனும் சேவைகளை மட்டுப்படுத்தின.

புனரமைப்புப் பணிகளின் முடிவடைந்து பின்னர் மீண்டும் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அந்நிலையில், இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் அனுராதபுரம் மற்றும் மாகோ இடையிலான ரயில் பாதை புனரமைப்புப் பணிக்காகக் கொழும்பில் இருந்து புறப்படும் ரயில்கள் மாகோவுடனும் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் ரயில்கள் அநுராதபுரத்துடனும் தமது சேவைகளை மட்டுப்படுத்தின.

அநுராதபுரம் – மாகோ ரயில் பாதை புனரமைப்புப் பணிகள் முடிவடைந்து கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுத்த போதிலும் , ரயில் சமிக்சை விளக்குகள் சீர்த்திருத்தப் பணிகள் உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியான வேலைகள் பூர்த்தியாகமையால் சேவைகள் ஆரம்பிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று திங்கட்கிழமை முதல் கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.