பெரும்பான்மை இல்லாத நிலையிலும் பதவியில் நீடிக்க ஜப்பானிய பிரதமர் முடிவு
ஜப்பானின் ஆளும் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெறத் தவறிவிட்டது.
இருப்பினும், பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்று ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபா, 67, தெரிவித்து உள்ளார்.
இம்மாதம் 1ஆம் தேதி புதிய பிரதமராகப் பொறுப்பேற்ற அவர், உடடினயாக பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சி (LDP) 15 ஆண்டுகளில் ஆக மோசமான தோல்வியைத் தழுவியது.
உலகப் போருக்குப் பின்னர் 1955ஆம் ஆண்டு முதல் சிறிய காலப் பகுதி தவிர ஜப்பானை அந்தக் கட்சியே ஆண்டு வருகிறது.
இருப்பினும், பணவீக்கம், ஆளும் கட்சியினரின் நிதி மோசடி ஆகியவற்றால் ஜப்பானியர்கள் வெறுப்படைந்து ஆளும் கட்சிக்கு இந்தத் தேர்தலில் பாடம் புகட்டியதாகக் கூறப்படுகிறது. 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் அக்கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.
எல்டிபி தலைமையிலான ஆளும் கூட்டணி பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்தபோதிலும் பிரதமர் பதவியில் தொடரப் போவதாக திரு இஷிபா அறிவித்துள்ளார்.
அரசியல் வெற்றிடத்துக்குத் தாம் அனுமதிக்கப்போவதில்லை என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மக்களின் வாழ்க்கையையும் ஜப்பானையும் பாதுகாப்பதில் நான் கொண்டிருக்கும் இலக்கை எட்ட விரும்புகிறேன்,” என்றார் அவர்.
முந்திய அரசாங்கம் பதவியில் இருந்தபோது தமது கட்சியினர் செய்த மோசடிகளால் மக்கள் அவநம்பிக்கையுடனும் ஆத்திரத்துடனும் இருந்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
பணம் மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அடிப்படை சீர்திருத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் திரு இஷிபா உறுதி அளித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) நடைபெற்ற தேர்தலில் ஆளும் கட்சியான எல்டிபி, கொமெய்டோ கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. வாக்குப் பதிவு முடிவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மொத்தமுள்ள 465 இடங்களில் அந்தக் கூட்டணி 215 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. அதில் எல்டிபிக்கு மட்டும் 191 இடங்கள் கிடைத்தன. 2021 தேர்தலில் அக்கட்சி 259 இடங்களில் வென்றது. தேர்தலுக்கு முன்பு வரை அந்தக் கூட்டணி வசம் 279 தொகுதிகள் இருந்தன.
அறுதிப் பெரும்பான்மை பெற 233 இடங்கள் தேவை.
என்எச்கே செய்தி நிறுவனம் இந்த விவரங்களை வெளியிட்டாலும் திங்கட்கிழமை பின்னரேத்தில் உறுதியான முடிவுகள் வெளிவரும்.
கொமெய்டோ கட்சியின் தலைவர் கெய்ச்சி இஷி தமது சொந்த மாவட்டத்தில் தோற்கடிக்கப்பட்டார்.
அதேநேரம், முக்கிய எதிர்க்கட்சியான ஜப்பானின் அரசமைப்பு ஜனநாயகக் கட்சி (CDPJ) 148 தொகுதிகளைக் கைப்பற்றியது. கடந்த தேர்தலில் பெற்ற 98 இடங்களைக் காட்டிலும் 50 இடங்கள் கூடுதலாக அந்தக் கட்சிக்குக் கிடைத்தன.
“இது முடிவல்ல; ஆரம்பம்,” என்று அந்தக் கட்சியின் தலைவரான யோஷிஹிகோ நோடா செய்தியாளர்களிடம் கூறினார்.
தற்போதைய அரசாங்கத்தை மாற்றுவதற்கு பிற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தமது கட்சி பணியாற்றும் என்றார் அவர்.
எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
வெளியாகியிருக்கும் தேர்தல் முடிவு அரசாங்கத்தின் மீதும் வருங்காலத்தின் மீதும் நிச்சயமற்ற நிலைமையை அதிகரித்திருப்பதாகக் கணிக்கப்படுகிறது.