இணையத்தள மோசடியில் 4 மாதத்தில் ரூ.120 கோடி இழப்பு
இணையத்தள மோசடியில் நான்கு மாதங்களில் மக்கள் 120 கோடி ரூபாயை இழந்துள்ளனர்.
பல வகைகளில் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். வெளிநாட்டில் வேலை, வீட்டில் இருந்து பணம் சம்பாதிக்கும் வழி, வங்கி அதிகாரிகள் போல் பேசுவது, போதைப்பொருள் பொட்டலம் உங்களுக்கு வந்துள்ளது என்று கூறி பலே கும்பல் மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகிறது.
இந்த நிலையில் மின்னிலக்க மோசடி குறித்து பிரதமர் மோடி தனது ஞாயிற்றுக் கிழமை நடந்த ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி வழியாக பொதுமக்களை எச்சரித்தார்.
இந்த ஆண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 7.40 லட்சம் இணையத்தள மோசடி புகார்கள் பதிவாகியுள்ளன. இதில் ரூ.120 கோடி வரை மோசடி கும்பல் பறித்துள்ளது. இணையத்தள மோசடி கும்பல்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே தொடர்பு கொள்கின்றனர்.
இந்தியாவைக் குறிவைத்து மியன்மார், லாவோஸ், கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து ஏராளமான மோசடிக் கும்பல் தொலைபேசி மற்றும் தகவல் தொடர்பு மூலம் மோசடிச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த 3 நாடுகளில் இருந்து மட்டும் 46 விழுக்காடு அளவிற்கு மோசடி நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.