எனக்கும் அநுரவுக்கும் இடையில் எவ்வித சண்டைகளும் இல்லை! போலிகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கூறுகின்றார் பிரதமர் ஹரிணி.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், தனக்கும் இடையில் அரசியல் ரீதியில் மோதல் ஏற்பட்டுள்ளது என்று வெளியாகும் தகவல்கள் போலியானவை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“போலிகளை உருவாக்குவதிலும், கட்டுக்கதைகளைப் பரப்புவதிலும் சிலர் வல்லவர்கள். இப்படியானவர்கள்தான், எனக்கும், தோழர் அநுரவுக்கும் இடையில் அரசியல் போர் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி வருகின்றனர்.
நாங்கள் தற்போது பேசுவதில்லையாம், விமர்சித்துக் கொள்கின்றோமாம். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரைத் தெரிவு செய்யும்போது, நான் கூறிய நபர் தெரிவு செய்யப்படாததால் எனக்குக் கடும் கோபம் ஏற்பட்டதாம். அநுரவுடன் சண்டை பிடித்தேனாம்.
ஏதோ கூட்டத்தில் இருந்தவர்களைப் போல் கதைகளைக் கூறி வருகின்றனர். இவை போலியான தகவல்கள். இது பற்றி கருத்துக் கூற நான் விரும்பவில்லை. இருந்தாலும் போலிகளுக்கு முடிவு கட்ட வேண்டும். எனக்கும் தோழர் அநுரவுக்கும் இடையில் எவ்வித சண்டையும் இல்லை. போட்டியும் இல்லை.” – என்றார்.