கோயில் திருவிழாவில் பட்டாசு விபத்து; 150க்கும் மேற்பட்டோர் காயம்
இந்தியாவின் கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் நேற்று (28) இரவு நடைபெற்ற கோயில் திருவிழாவில் மிக மோசமான பட்டாசு விபத்து ஏற்பட்டது.
இதில் 150க்கும் மேற்பட்டோர் காயமடிந்துள்ளதோடு, அவர்களில் எட்டு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெய்யம் விழாவின் தொடக்கமாக அஞ்சுதாம்புலம் வீரக்காவு
கேரளாவில் கொண்டாடப்படும் தெய்யம் விழாவின் தொடக்கமாக அஞ்சுதாம்புலம் வீரக்காவு அனுசரிக்கப்படுகிறது.
அந்தச் சடங்கின்போது இப்பட்டாசு விபத்து நிகழ்ந்ததாகக் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கட்டுக்கடங்காத பட்டாசு வெடிப்புகளையும் கொழுந்துவிட்டு எரியும் தீயையும் காட்டும் காணொளிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
நள்ளிரவு நேரத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதாகவும் அப்போது பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த கொட்டகைக்குள் தீமூட்டப்பட்ட பட்டாசு தவறுதலாக விழுந்திருக்கக்கூடும் என்றும் கூறப்படுகின்றது.
ஆலய திருவிழாவில் இடம்பெற்ற இந்த அசம்பாவிதம் பிரதேசவாசிகளிடையே துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.