வடக்கு பொறிமுறையின் தோல்விக்கு காரணமான டக்ளஸ் மீது நடவடிக்கை – அநுர அரசு எடுக்க வேண்டும் என்கிறது ‘பசு’ சுயேச்சை.

வடக்கில் கல்வி, சுகாதாரம் உட்பட ஒட்டுமொத்தப் பொறிமுறையையும் தோல்வியடையைச் செய்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது பொறிமுறை மாற்றம் (‘சிஸ்டம் சேன்ஜ்’) பற்றிப் பேசும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் பசு சின்னத்தில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் சுயேச்சையாகப் போட்டியிடும் தமிழர் சம உரிமை இயக்க முதன்மை வேட்பாளர் தேவானந்த.

யாழ். நல்லூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போதே இதனைக் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழர்களின் சொத்துக் கல்வி. அதை நாங்கள் பேணிப் பாதுகாக்கவேண்டும். இப்போது கல்வியில் நாம் மிகவும் பின்னடைந்திருக்கின்றோம். இலங்கை முழுவதிலும் யாழ். மாவட்டமே கல்வியில் பின் தங்கியிருக்கின்றது. இதற்கு முக்கிய காரணம் கல்வி விடயங்களில் அரசியல்வாதிகளின் தலையீடு.

அரசியல் தலையீடு காரணமாக தகுதியானவர்கள் ஒதுக்கப்பட, தகுதியற்றவர்கள் அரசியல்வாதிகளைப் பிடித்துக்கொண்டு பதவிகளுக்கு வருகின்றார்கள். கல்வித் தரம் கீழ் நிலைக்குச் சென்றமைக்கு அதுவும் ஒரு காரணம்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீடுகள் காரணமாக கல்வி முன்னேற்றம் தடைப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகப் பேரவையில் டக்ளஸ் தேவானந்தாவின் அடிவருடிகள் நியமிக்கப்படுகின்றார்கள். அமைச்சருக்குத் தேவையானதைத்தான் அவர்கள் செய்கின்றார்கள்.

இதில் மேலும் கவலைக்குரிய விடயம் பேராசிரியர்களும், கல்விமான்களும் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம் அமைந்துள்ள ‘தியட்டரில்’ போய் தங்களுக்குப் பதவி பெறுவதற்காகக் காவல் காத்திருக்கின்றார்கள். இது மிகவும் வெட்கக்கேடான நிலைமை.

தன்னுடைய கட்சி மூலம் தேர்தல் கேட்டுத் தோல்வி அடைந்தவர்களை பல்ககைக்கழக உறுப்பினர்களாக டக்ளஸ் தேவானந்தா போடுகின்றார். அவர்கள் பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களாகத் தரமானவர்கள் தெரிவு செய்யப்படுவதற்குத் தடையாக இருக்கின்றார்கள்.

தமிழர் சம உரிமை இயக்கத்தின் கொள்கை தகுதியானவர்களுக்குத் தகுதியானவை கிடைக்கப் பெறவேண்டும் என்பதே. கல்வியில் மட்டுமல்ல சுகாதாரத்துறையிலும் இதே பிரச்சினை இருக்கின்றது. உண்மையான சுகாதாரத் தொண்டர்களாக இருப்பவர்களில் கிட்டத்தட்ட 300 பேரின் வாய்ப்பைத் தட்டிப்பறித்து ஈ.பி.டி.பியினர் தமக்குத் தேவையானவர்களை நியமனம் செய்துள்ளனர். அதிலும் தகுதியற்றவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

தகுதியற்றவர்களுக்கு வேலை வழங்குவதில் டக்ளஸ் தேவானந்தா முதன்மையானவராக இருக்கின்றார். கடந்த 20 வருடங்களாக அமைச்சராக இருந்து வட பகுதியின் அனைத்துப் பொறிமுறைகளையும் தோல்வியடைச் செய்தவராக அவர் இருக்கின்றார். அதைச் செய்துவிட்டுப் பின்னர் அதைத் தான் சரி செய்வார் என்று மக்களைக் காக்க வைத்தும் வரிசையில் நிற்கவைத்தும் ஒரு போலித் தோற்றத்தை உருவாக்குகின்றார்.

அதனால் அனைவருக்கும் நேர்மையான, வெளிப்படைத்தன்மையான ஒரு பொறிமுறையை உருவாக்குதிலே நாம் அர்ப்பணிப்போடு இருக்கின்றோம். அதற்காகப் போராடுவோம். இன்று பொறிமுறை மாற்றம் (சிஸ்டம் சேன்ஜ்) பற்றிப் பேசப்படுகின்றபோது, ஏற்கனவே இருந்த பொறிமுறையை மிகவும் பாழ்படுத்திய, மிக மோசமாக அதை வீழ்ச்சியடையச் செய்த டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களை தற்போதைய அநுரகுமார அரசு என்ன செய்யப் போகின்றது என்பது மிகப் பெரிய கேள்வி?

தமிழ் மக்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியவற்றைத் தடுப்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழர் சம உரிமை இயக்கம் ஜனாதிபதியிடம் முன்வைக்கின்றது. ” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.