பெங்களூர் இயற்கை மருத்துவ நிலையத்தில் தங்கிச் சென்ற மன்னர் சார்ல்ஸ்
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் பெங்களூரில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவ நிலையத்தில் மூன்று நாள் தங்கிச் சென்றதாக புதன்கிழமை (அக்டோபர் 30) தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னருடன் அரசியார் கமிலாவும் வந்திருந்ததாகக் கூறப்பட்டது.
தனிப்பட்ட முறையில் மூன்று நாள் பயணம் மேற்கொண்டு வந்திருந்த அரச தம்பதி, ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவ நிலையத்தில் தங்கினர்.
அங்கு யோகா, தியானம் உட்படப் பல்வேறு உடல்நல சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன. ஆயுர்வேத, இயற்கை மருத்துவ முறையிலான சிகிச்சைகள் அவை.
‘சௌக்யா’ எனப்படும் அந்த நிலையம், வைட்ஃபீல்டு பகுதிக்கு அருகே 30 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
சார்ல்ஸ் இந்த நிலையத்திற்கு வருகைதந்தது இது முதன்முறை அல்ல. 2019ஆம் ஆண்டு மன்னரது 71வது பிறந்தநாளை அவர் இங்குக் கொண்டாடினார்.
நிலையத்தை நடத்தும் டாக்டர் ஐசக் மத்தாய், மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட சிலரில் அடங்குவார்.