இந்திய நிறுவனங்கள்மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை.
உக்ரேனில் ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு உதவியதற்காக சில இந்திய நிறுவனங்கள் உட்பட கிட்டத்தட்ட 400 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
“ரஷ்யாவின் சட்டவிரோதப் போரைத் தொடர உதவும் கிட்டத்தட்ட 400 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த நடவடிக்கையில், 120க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வெளியுறவுத்துறை தடைகளை விதிக்கிறது,” என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை கூறியது.
மேலும், நிதித்துறை 270க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது தடைகளை விதிக்கிறது. வர்த்தகத் துறையும் அதன் தடைப் பட்டியலில் 40 நிறுவனங்களைச் சேர்த்துள்ளது.
இந்திய நிறுவனங்கள்மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைவிதிப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் பல்வேறு சட்ட விதிமுறைகளை மீறியதாக பல இந்திய நிறுவனங்களை அமெரிக்கா தடை செய்துள்ளது.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இந்திய நிறுவனங்களில் ஒன்று அசெண்ட் ஏவியேஷன் இந்தியா பிரைவேட் லிமிட்டெட். இது மார்ச் 2023 மற்றும் மார்ச் 2024க்கு இடையில் ரஷ்யாவைத் தளமாகக் கொண்ட நிறுவனங்களுக்கு 700 ஏற்றுமதி தொகுப்புகளை அனுப்பியது.
டி.எஸ்.எம்.டி. குளோபல் பிரைவேட் லிமிட்டெட் என்ற இந்தியாவைத் தளமாகக் கொண்ட நிறுவனமும் ரஷ்யாவுக்குப் பொருள்களை அனுப்பியது.
இந்தியாவைத் தவிர சீனா, மலேசியா, தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு சிற்றரசு உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்கா அக்கறை
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிரான கனடாவின் குற்றச்சாட்டுகள் “கவலை தரக்கூடியவை” என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் தகவல் ஒன்று அண்மையில் கசிந்தது. அதில் “கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளைக் குறிவைக்கும் திட்டத்தின் பின்னணியில் ஓர் இந்திய உயர் அதிகாரி இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை மேற்கோள்காட்டி கனடாவின் தேசியப் பாதுகாப்புப் புலனாய்வு ஆலோசகர் நதாலி ட்ரூயின் மற்றும் துணை வெளியுறவு அமைச்சர் டேவிட் மோரிசன் ஆகியோர், “அமித்ஷா இச்செயல்களில் ஈடுபட்டிருக்கலாம்” என்று குற்றஞ்சாட்டினர்.