விட்டுக்கொடுக்க தயார், ஆனால் வரம்புகள் உள்ளன: ஹிஸ்புல்லா.
இஸ்ரேலுடன் ஒரு மாதத்துக்கு மேலாகப் போரில் ஈடுபட்டுள்ள ஹிஸ்புல்லா, சண்டைநிறுத்தத்திற்குத் தயார் என்று கூறியுள்ளது.
இருப்பினும், மிக மோசமான தாக்குதல்களை அனுபவித்த பிறகு, தான் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிபந்தனைகளைப் பொறுத்தவரை வரம்புகள் உள்ளதாக அது கூறியதாய் நிபுணர்கள் தெரிவித்தனர்.
ஈரான் ஆதரவுக் குழுவான அது, சண்டைநிறுத்த உடன்படிக்கை, தகுந்த நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ளும் என்று அக்டோபர் 30ஆம் தேதி கூறியது.
இந்நிலையில், வரும் நவம்பர் 5ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே சண்டைநிறுத்த உடன்படிக்கை எட்டப்படலாம் என்பதற்கான அறிகுறிகளை அமெரிக்கத் தூதர் ஏமஸ் ஹொச்ஸ்டைனிடமிருந்து பெற்றதாக லெபனான் பிரதமர் நஜீப் மிகாட்டி கூறியுள்ளார்.
தனது மூத்த தலைவர்கள் பலர் கொல்லப்பட்டதாலும் தனது கட்டுப்பாட்டில் உள்ள இடங்கள் அழிக்கப்பட்டதாலும், ஹிஸ்புல்லா அமைப்பு சண்டைநிறுத்தத்தின்போது அவற்றிலிருந்து மீண்டுவரலாம் என்று கூறப்படுகிறது.
“சண்டைநிறுத்தம் ஹிஸ்புல்லாவுக்கு முன்னுரிமை. அப்போதுதான் மீண்டும் அதன் நிலைகளை அதனால் மறுசீரமைக்க முடியும்,” என்று அந்த அமைப்புடன் நெருக்கமான லெபானானிய நிபுணர் காசிம் காசிர் தெரிவித்தார்.
“தென் லெபனானில் ராணுவத்தினர் பணியில் அமர்த்தப்படுவதற்கும் தான் எல்லைப் பகுதிகளிலிருந்து விலகியிருப்பதற்கும் அது ஒப்புகொள்ளும். ஆனால், அதற்குமேல் ஹிஸ்புல்லா எதனையும் ஏற்றுக்கொள்ளாது,” என்றார் அவர்.
ஹிஸ்புல்லா, எல்லைப் பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தூரம் தள்ளியிருக்க வேண்டும் என்று இஸ்ரேலியத் தரப்பு முன்வைத்த கோரிக்கைகளை திரு காசிம் சுட்டினார்.
பாலஸ்தீன ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா 2023ஆம் ஆண்டில் இஸ்ரேலை எதிர்த்து எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடத் தொடங்கியது.
ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா, அவருக்கு அடுத்த நிலையில் இருந்த ஹஷிம் சஃபிடின் உள்ளிட்ட மூத்த தலைவர்களை இஸ்ரேல் கொன்றுவிட்டது.
இந்நிலையில், மத்திய காஸாவில் உள்ள ‘டீர் அல் பலா’ நகரில் இஸ்ரேல் இரவு முழுதும் நடத்திய தாக்குதலில் 47 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள். பலர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன செய்தி நிறுவனமான ‘வாஃபா’ தெரிவித்தது.