யாழ். தந்தை செல்வா கலையரங்கில் தமிழரசின் விஞ்ஞாபனம் வெளியீடு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் வெளியீடு செய்யப்பட்டது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு கட்சியின் உப தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று முற்பகல் 11 மணியளவில் யாழ். தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது.
இதன்போது தேர்தல் விஞ்ஞாபனத்தின் முதல் பிரதியைக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் வெளியிட்டு வைக்கத் தமிழரசுக் கட்சியின் பிரித்தானியாக் கிளையின் முக்கியஸ்தர் சிவசுப்பிரமணியம் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஏனைய வேட்பாளர்களுக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரதிகளைக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் வழங்கி வைத்தார்.
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் கலந்துகொள்ளாத நிலையில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.
தமிழரசுக் கட்சியின் தலைவர் உடல்நிலை காரணமாக வரவில்லை எனக் கூறப்பட்டது. எனினும், முதன்மை வேட்பாளர் பங்குபற்றாமைக்கான காரணம் குறிப்பிடப்படவில்லை.
இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் உப தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் பொதுச் செயலாளர் சத்தியலிங்கம், நிர்வாகச் செயலாளர் குலநாயகம், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர்களான எம்.ஏ.சுமந்திரன், கே.சயத்தன், ச.சுகிர்தன், சி.கிருஷ்ணவேணி, இ.ஆர்னோல்ட், ச.சுரேகா, எம்.சி.சி.இளங்கோவன், தி.பிரகாஷ் மற்றும் ஆதரவாளர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.



