முல்லைத்தீவில் ஊடகர்களைத் தாக்கி வாக்குமூலம் பெற்ற வன்முறைக் குழு!

முல்லைத்தீவில் ஊடகர்களைத் தாக்கி
வாக்குமூலம் பெற்ற வன்முறைக் குழு!


வெளியாகின அதிர்ச்சித் தகவல்கள் 

முல்லைத்தீவு மாவட்டம், கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முறிப்புக் கிராமத்தில் மாபியாக்கள் போல் செயற்படும் நான்கு பேர் கொண்ட வன்முறைக் குழு ஒன்று ஊடகவியலாளர்கள் இருவரைக் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தியதுடன் அவர்களிடம் இருந்த சொத்துக்களையும் அபகரித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-

“முறிப்பு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தலைமையிலான குறித்த குழு சட்டவிரோத மரக்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. அந்தப் பகுதியில் காணப்படுகின்ற தேக்கு மற்றும் முதிரை மரங்களைக் கடத்தும் நடவடிக்கையை வழமையாகக் கொண்டு செயற்படும் அந்தக் குழு அடிதடி வன்முறையில் ஈடுபட்டு வருகின்றது.

இலங்கை தேசிய மரக்கூட்டுத்தாபனம் ஒன்றின் உப ஒப்பந்ததாரராகிய பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கான மரம் ஏற்றும் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் குறித்த குழு தமக்குக் காப்பரணாக குறித்த நிறுவனத்தையும் மரக்கூட்டுத்தாபனத்தையும் பயன்படுத்தி வந்திருக்கின்றது.

நீண்டகாலமாகக் குறித்த மரக்கடத்தல் தொடர்பில் குமுழமுனை மற்றும் முறிப்பு பகுதி மக்களால் பொறுப்பு வாய்ந்த தரப்புக்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரியவருகின்றது.

அந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கும் நபர் தேக்கு மரத்தினாலான மர வீடு ஒன்றை அமைத்து வருகின்றார் எனவும், அதனையாவது வெளியில் கொண்டு வருமாறும் முறிப்பு மற்றும் குமுழமுனை மக்கள் ஊடகவியலாளர்களான குமணன் மற்றும் தவசீலன் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்திருகின்றனர் .

இதையடுத்து இன்று பிற்பகல் சென்ற ஊடகவியலாளர்கள் இருவரும் சம்பவம் தொடர்பில் கேள்வி எழுப்ப முற்பட்டபோது குறித்த நபரும் அவருடைய கையாட்கள் மூவரும் வாச்சி, கொட்டன், தடிகள், இரும்புக்கம்பிகளால் இருவரையும் கடுமையாகத் தாக்கி பணயக் கைதிகளாக்கியிருக்கின்றனர்.

பின்னர் ஊடகவியலாளர்களின் தொலைபேசி மற்றும் கமராக்களில் இருந்த காட்சிப் பதிவுகளை அழிக்கவைத்ததுடன், அவர்களிடம் இருந்த தங்க நகைகள், 50 ஆயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட பணம் என்பவற்றையும் கொள்ளையிட்டிருக்கின்றனர். ஊடகவியலாளர்கள் இருவரையும் திருடர்கள் என்று தெரிவுக்குமாறு நிர்ப்பந்தித்து காணொளி ஒன்றையும் பதிவு செய்திருக்கின்றனர். அதன் பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸாரிடம் முறையிடுவதற்காக ஊடகவியலாளர்கள் இருவரும் சென்றிருக்கின்றனர்.

குறித்த தாக்குலாளிகளுக்கு அதிகாரத் தரப்புடன் நெருக்கமான உறவுகள் இருக்கின்றன எனவும், தமக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை எனவும் பாதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.