தமிழக நீரிழிவு நோயாளிகளுக்கான ‘பாதம் பாதுகாப்போம்’ திட்டம் விரிவாக்கம்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நீரிழிவு நோயாளிகளுகளுக்கான ‘பாதம் பாதுகாப்போம்’ திட்டம் விரிவுபடுத்தப்படுவதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 100 மில்லியனுக்கும் மேற்பட்டோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 25 விழுக்காட்டினர் பாதம் சார்ந்த பாதிப்புகளால் அவதிப்படுவதாகவும் அவர்களில் 85 விழுக்காட்டினர் கால்களை இழக்க நேரிடுவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் எட்டு மில்லியன் பேர் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறையின் அறிக்கை குறிப்பிடுகிறது.
நீரிழிவால் பாதத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தொடக்க நிலையிலேயே கண்டறியாவிடில், அதன் பின்விளைவுகள் ஆபத்தானதாக இருக்கும். கிருமித்தொற்று ஏற்பட்டு, கால்களை இழக்கவும் நேரிடலாம். பாத பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்தால் கால் அகற்றப்படுவதை 85% தடுத்துவிடலாம் எனக் கூறப்படுகிறது.
இதனைக் கருத்தில்கொண்டே, ‘பாதம் பாதுகாப்போம்’ எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், “நீரிழிவால் பாதங்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதிலும் கால் அகற்றப்படுவதை தடுப்பதிலும் ‘பாதம் பாதுகாப்போம்’ திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின்கீழ் இதனைக் கட்டமைத்து, நாட்டிலேயே முதல்முறையாக, 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மூலம் ஒருங்கிணைந்த பாத மருத்துவச் சேவைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது,” எனக் கூறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தைத் தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படுத்தியதில், இதுவரை 165,000 பேருக்கு பாத நோயறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அத்திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாகவும் அதற்காக ரூ.26.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின்மூலம் எட்டு மில்லியன் நீரிழிவு நோயாளிகளைப் பாதப் பரிசோதனைக்கு உட்படுத்த இலக்கு வகுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர்களுக்கு ஏற்படும் பாத உணர்வு இழப்பு, ரத்த நாள அடைப்புகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.