ஓர் ஆலோசனைக்கு ரூ.100 கோடி சம்பளம் பெற்ற பிரசாந்த் கிஷோர்!
பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜக கூட்டணியுடன் ஆட்சியில் உள்ளது. இந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், ஐக்கிய ஜனதா தளம் பாஜகவின் என்.டி.ஏ. கூட்டணியில் இடம் பெற்றது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தாராரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் உறுப்பினர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்த நான்கு தொகுதி எம்.எல்.ஏ.க்களும் எம்.பி.க்களாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது அந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் 13ம் தேதி இந்த நான்கு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சூரஜ் கட்சியும் போட்டியிடுகிறது.
இதில், பெலகஞ்ச் தொகுதியில் கடந்த 31ம் தேதி ஜன் சூரஜ் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “என் பிரச்சாரங்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என கேட்கிறார்கள். ஒரு தேர்தலுக்கு ஒரு கட்சிக்கோ அல்லது ஒரு தலைவருக்கோ ஆலோசனை வழங்க நான் ரூ. 100 கோடி அல்லது அதற்கும் மேலாக ஊதியம் பெற்றேன்.
தற்போது இந்தியா முழுக்க 10 மாநிலங்களில், என் ஆலோசனை மூலம் அரசு நடைபெற்றுவருகிறது. தற்போது சொல்லுங்கள் என்னிடம் போதுமான பணம் இருக்குமா இருக்காதா? நான் அவ்வளவு பலவீனமானவன் என நினைக்கிறீர்களா? என்னைவிட பீகாரில் யாரும் அதிக ஊதியம் பெறுவதில்லை. அடுத்த இரண்டு ஆண்டுக்கு எனது ஒரு தேர்தல் ஆலோசனை ஊதியத்தை வைத்து என்னால் பிரச்சாரம் மேற்கொள்ள முடியும்” என்று தெரிவித்தார்.