தீர்வுக்கான தீர்க்கமான பொறிமுறை அவசியம் அதற்காக அனைவரையும் ஒன்றிணைப்போம் என்கிறது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி.
“நிரந்தர அரசியல் தீர்வுக்கான தீர்க்கமான பொறிமுறை அவசியம். அதற்காக அனைவரையும் ஒன்றிணைப்போம்.” – என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“ஏற்கனவே எமது கட்சியால் நிரந்தர தீர்வுக்கான ஒரு பொறிமுறை முன்மொழியப்பட்டுள்ளது. மாறிரும் உள்ளக மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளால் அரசியல் தீர்வு பிற்போடப்பட்டுக் கொண்டு வருகின்றது.
குறிப்பாக நிரந்தர அரசியல் தீர்வு என்பது ஒரு புதிய அரசியல் யாப்பின் ஊடாகவே சாத்தியம் என்பது அனைவரும் அறிவர். புதிய அரசியல் யாப்பு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதேவேளையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 51 வீதம் பெற்றால் தான் புதிய அரசியல் யாப்பு செல்லுபடியாகும்.
தற்போதுள்ள ஜனாதிபதி 42 வீதம் வாக்குகளையே பெற்றுள்ளார். எதிர்த் தரப்புக்களும் நிரந்தர தீர்வுக்கு சாதகமாக இருப்பார்களா என்பது கேள்விக்குறியே.
ஆகவேதான் நாங்கள் அரசியல் யாப்பிலே இருக்கும் அதிகாரங்களையும் ஏற்கனவே பறிக்கப்பட்ட அதிகாரங்களையும் மீள வழங்கி ஒரு நியாயமான அதிகாரப் பகிர்வை உடனடியாக மேற்கொண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோரி வருகின்றோம். அது நிரந்தர அரசியல் தீர்வு அல்ல என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
அதேவேளை, நாட்டிலே ஏற்படுகின்ற அரசியல் மாற்றங்களினாலே நமது நிரந்தரமான அரசியல் தீர்வு என்பது தொடர்ந்தும் கானல் நீராகவே இருக்கின்றது. இதைத் தாண்டி நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி நாம் நகர்வதற்கு ஒரு பொறிமுறை அவசியமானது. அதை நாங்கள் ஏற்கனவே முன்மொழிந்துள்ளோம். பிராந்திய, சர்வதேச வல்லரசுகளின் பிரதிநிதிகள், ஐ.நா. பிரதிநிதிகள், புலம்பெயர் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச தரப்பு, உள்நாட்டு தமிழர் தரப்பு ஆகியோரை ஒன்றிணைத்து ஒரு உறுதியான பொறிமுறை உருவாக்கப்பட்டால்தான் அரசியல் தீர்வை நோக்கிக் காத்திரமாக நகர முடியும்.
அதில் நாம் மிகவும் பற்றுறுதியோடு இருப்பதோடு நடைமுறைப்படுத்துவதற்கு கட்சி நலன்கள், பதவி மோகங்கள், முரண்பாடுகளை களைந்து அனைவரையும் ஒன்றிணைப்போம். அதில் நாம் அர்ப்பணிப்போடு உள்ளோம். தேர்தலுக்குப் பின்னராக பிரதானமாக இந்தப் பொறிமுறையை உருவாக்குவதில் நாம் அர்ப்பணிப்போடு பயணிப்போம். அதுவே அரசுக்கு அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கும் தீர்வை எட்டுவதற்கும் சாத்தியமான வழிமுறையாகும்.” – என்றுள்ளது.