தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்பு – நுவரெலியாவில் ஜனாதிபதி அநுர உறுதி.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
நுவரெலியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“ஜனாதிபதித் தேர்தலின்போது தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றினார்கள். மே தினக் கூட்டத்துக்குக் கொட்டகலைக்கு வந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம் வழங்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி கூறினார். ஆனால். இன்னமும் அந்தச் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. அவர் வீட்டுக்கும் சென்றுவிட்டார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு நாம் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். அதேபோல் அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும்.
மக்கள் எந்நாளும் அரச நிவாரணங்களை நம்பி வாழ முடியாது. மக்கள் சுயமாக எழுந்து நிற்ககூடிய வகையில் பொருளாதாரச் சூழ்நிலையை நாம் உருவாக்குவோம்.” – என்றார்.