வரன் பார்த்து தராத மேட்ரிமோனி நிறுவனத்திற்கு அபராதம் விதித்த நீதிமன்றம்

வரன் பார்த்து தராத மேட்ரிமோனி நிறுவனத்திற்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் விஜய் குமார். இவர் தனது மகன் பாலாஜியின் திருமணம் செய்ய முடிவு செய்து, பெண் தேடுவதற்கு அங்குள்ள மேட்ரிமோனி நிறுவனத்தை கடந்த மார்ச் 17 ஆம் தேதி அணுகியுள்ளார்.

அதற்கு ரூ. 30,000 செலுத்துமாறு மேட்ரிமோனி நிறுவனம் கூறியுள்ளது. உடனே ரூ. 30,000 செலுத்திய விஜய் குமார் தனது மகனின் புகைப்படம் மற்றும் தேவையான அணைத்து ஆவணங்களையும் வழங்கியுள்ளார்.

45 நாட்களில் பெண் பார்த்து தருவதாக உறுதியளித்த நிறுவனம், எந்த வரனும் பார்த்துக்கொடுக்காததால், பலமுறை விஜய குமார் அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரித்துள்ளார். கொஞ்ச நாள் காத்திருக்கும்படி தெரிவித்துள்ளனர்.

பொறுமையிழந்த விஜய குமார், ஏப்ரல் 30 ஆம் தேதி, அலுவலகத்திற்குச் சென்று தனது பணத்தைத் திரும்ப தருமாறு கேட்டுள்ளார். அப்போது அங்கு பணிபுரிபவர்கள் பணத்தை திரும்ப தர மறுத்ததோடு, அவரை அவதூறாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.

அதனால் வேதனையடைந்த விஜயகுமார், மே 9 அன்று அந்த மேட்ரிமோனி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார். அதற்கும் பதிலளிக்காத நிலையில், நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் செலுத்திய ரூ.30,000, சேவை குறைபாட்டிற்காக ரூ.20,000, மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ.5,000, வழக்கு செலவு ரூ.5000 என மொத்தம் ரூ.60,000 விஜயகுமாருக்கு செலுத்த நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave A Reply

Your email address will not be published.