திருவொற்றியூர் பள்ளியில் மீண்டும் வாயுக் கசிவு…பள்ளி தற்காலிகமாக மூடல்!
10 நாட்களுக்குப் பின் மீண்டும் வாயு கசிவு ஏற்பட்டதால், சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.
சென்னை திருவொற்றியூரில் விக்டரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த மாதம் 25ஆம் தேதி வாயு கசிவு ஏற்பட்டு, 35 மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டனர். வாயு கசிவுக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், பள்ளி நிர்வாகம் விடுமுறை அளித்திருந்தது.
இந்த நிலையில் , விடுமுறை முடிந்து அந்த பள்ளி இன்று மீண்டும் திறக்கப்பட்டது. இன்றும் பள்ளியில் வாயு கசிவு காரணமாக 8 மாணவிகள் மயக்கமடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
10 நாட்களுக்குப் பின் மீண்டும் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் , சென்னை மாநகராட்சி துணை ஆணையர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.
இதனிடையே, தற்காலிகமாக அந்தப் பள்ளி மூடப்படுவதாக அறிவிக்கப்ப்டடுள்ளது. வாயு கசிவுக்கான காரணம் குறித்து முழுமையாக ஆய்வு செய்த பிறகே பள்ளி மீண்டும் திறக்கப்படும் என தலைமை ஆசிரியர் ரூத் வனிதா தெரிவித்துள்ளார்.