எதிர்வரும் 14ம் திகதி நாமனைவரும் சேர்ந்து பாராளுமன்றத்தைச் சுத்திகரிப்போம்- பிரதமர் ஹரிணி அமரசூரிய.

இம்மாதம் 14 ம் திகதி நாமனைவரும் சேர்ந்து பாராளுமன்றத்தைச் சுத்தம் செய்வோம், அந்தச் சுத்திகரிப்பு யாதெனில்,மக்களுடைய துன்ப துயரம் ஏழ்மை வறுமை போன்றவற்றைப் பயன்படுத்தி தாங்கள் அதிகாரத்துக்கு வர நினைக்கிற அரசியல்வாதிகளை அகற்றுவதாகுமென பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இன்றைய தினம் (04.11)திங்கட்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்தகால அரசியல்வாதிகள் அதிகாரத்துக்கு வருவதற்கு மக்களின் பிரச்சினைகளை ஏணியாக பயன்படுத்தினார்களே தவிர அவர்கள் அதிகாரத்துக்கு வந்த பிற்பாடு அந்த மக்களின் பிரச்சினைகளை திரும்பிப் பார்க்கவில்லை. தொடர்ந்தும் இந்த மக்களை பிரச்சினைகளில் வழி நடத்துவதே அவர்களுடைய அரசியல் வாழ்வுக்கு சாதகமாக காணப்படுகிறது.
இப்போது மக்களுக்காகத் தன்னை அர்ப்பணிக்கின்ற மக்களுக்காகவே செயற்படுகின்ற ஒரு ஜனாதிபதி தோழர் நம்முடன் இருக்கின்றார்.
தற்போது நமக்குத் தேவைப்படுவது மக்களுக்காக வேலை செய்யக்கூடிய ஒரு பாராளுமன்றத்தை அமைத்துக் கொள்வதேயாகும்.
இந்த மாதம் 14ஆம் திகதி நாங்கள் அனைவரும் சேர்ந்து பாராளுமன்றத்தை சுத்தப்படுத்துவோம். மக்களுடைய துன்ப துயரத்தை பயன்படுத்திக் கொண்டு பாராளுமன்றத்துக்கு வருபவர்களை அதிலிருந்து அகற்றுவோம். இன மத மொழி பேதங்களற்ற ஒரு அரசியலமைப்பை உருவாக்குவோம் அதற்காக நீங்களனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்றார்.
இதன் போது தேசிய மக்கள் சக்தி கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.