அமெரிக்க அதிபர் தேர்தலில் கலகத் தடுப்பு பணிகள் தீவிரம்
அமெரிக்க அதிபர் தேர்தல் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) நடைபெறவுள்ள வேளையில், வன்முறை நிகழுமோ என்ற அச்சத்தில் தேர்தல் நாளிலும் அதற்குப் பிறகும் பாதுகாப்பை வலுப்படுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் நெவாடா போன்ற முக்கிய மாநிலங்களில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்பட்டுள்ளன. 2020 தேர்தலுக்குப் பிறகு, முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.
ஆர்ப்பாட்டங்கள் அல்லது வன்முறை ஏற்படுமோ என்ற அச்சத்தில், கடந்த தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களாக செயல்பட்ட அரிசோனா பள்ளிகளும் தேவாலயங்களும் இம்முறை அவ்வாறு செயல்பட மாட்டா என உள்ளூர் தேர்தல் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
முக்கிய மாநிலங்களையும் தாண்டி, தேசிய காவல்படையினரைப் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக ஒரிகன், வாஷிங்டன் மாநில அதிகாரிகள் கூறியுள்ளனர்.