வீட்டுக்கு வேலை செய்ய வந்த சிறுமி கொல்லப்பட்டதாக பெண் வாக்குமூலம்
சென்னைக்கு வேலை செய்ய வந்த சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த நிலையில் வீட்டுக்கு வேலை செய்ய வந்த சிறுமியைக் கொன்ற காரணத்தை விசாரணையில் பெண் தெரிவித்துள்ளார்.
சென்னை அமைந்தகரை மேத்தா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஓராண்டுக்கு மேலாக முகமது நிஷாத், 36, நாசியா, 30 என்ற தம்பதியர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆறு வயதில் மகன் உள்ளார்.
முகமது நிஷாத், பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் மகனை பார்த்துக்கொள்வதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி அருந்ததி தேவியை, 15, வீட்டு வேலைக்கு அமர்த்தியிருந்தனர்.
அந்த சிறுமி குளிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து இறந்துவிட்டதாக, அமைந்தகரை காவல் நிலையத்தில் இரு தினங்களுக்கு முன் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், காவல்துறை விசாரணையில், நாசியா, முகமது நிஷாத், கொளத்துாரைச் சேர்ந்த அவரது நண்பர் லோகேஷ், 36, அவரின் மனைவி ஜெயசக்தி, 24, கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த மற்றொரு வேலைக்கார பெண் மகேஸ்வரி, 40, அடையாறு பகுதியைச் சேர்ந்த முகமது நிஷாத் சகோதரி சீமா பேகம், 39 ஆகியோர், சிறுமியை அடித்து சித்ரவதை செய்து கொலை செய்தது தெரியவந்தது.
அவர்கள் மீது கொலை, வன்கொடுமை தடுப்பு சட்டம், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் போக்சோ உள்ளிட்ட நான்கு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆறு பேரும் கைது செய்யப்பட்டு வரும் 16ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
“கோவை தென்னம்பாளையத்தில், எங்கள் உறவினர் வீட்டுக்கு சென்று இருந்த போது, அங்கு வீட்டு வேலை செய்து வந்த சிறுமியின் தாயை சந்தித்தோம். அவரிடம் பேசி, எங்கள் குழந்தையை கவனித்துக் கொள்ள, சிறுமியை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தோம். சிறுமியின் தந்தை இறந்து விட்டார். ஒரு மகனுடன் அவரது தாயும் ஏழ்மை நிலையில் உள்ளார். சிறுமியை அடிமை போல நடத்தினோம்; போதிய சம்பளமும் தரவில்லை. அவரது தாயை சந்திக்கவும் அனுமதிக்கவில்லை. நான்கு மாதத்திற்கு முன்புதான், சிறுமி பெரிய பெண் ஆனார். அவர் சொந்த ஊருக்கு சென்றால், மீண்டும் வர மாட்டார் என்பதால் நாங்கள் அனுப்பவில்லை. என் கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. இதனால், எங்களுக்குள் தினமும் தகராறு ஏற்படும். சிறுமி கறுப்பாக இருந்தாலும் அழகாக இருப்பார். அதனால், என் கணவரின் பார்வை சிறுமியின் பக்கம் திரும்பியது. அதில், எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது,” என்று நாசியா வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.