தீர்த்தம் என நினைத்து ஏசியிலிருந்து வெளியான நீரைக் குடித்த பக்தர்கள்
உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனம் எனும் இடத்தில் அமைந்துள்ள பாங்கே பிஹாரி கோயில், அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானது.
காரணம், கோயிலுக்கு வந்த பக்தர்கள் செய்த ஒரு வேலைதான். கோயிலுக்குள் சுவாமியைப் பார்த்ததும் அங்கே பிரசாதம் வழங்கப்படும். ஆனால் அதைவிடுத்து, கோயிலின் சுற்றுச்சுவர்களில் எல்லாம் கொட்டும் தண்ணீரை தீர்த்தம் என நினைத்து ஒருவரோடு ஒருவர் மோதி அந்த நீரைப் பிடித்துக் குடித்துச் செல்வது எக்ஸ் பக்கத்தில் விடியோவாக வெளியானபோதுதான் இந்த கோயில் நாடு முழுவதும் பிரபலமடைந்தது.
அதாவது, கோயிலுக்குள் இருக்கும் ஒரு சிற்பத்திலிருந்து நீர் சொட்டுச் சொட்டாக வெளியேறுகிறது. பக்தர்கள் பலரும் அதனை அபிஷேகம் செய்த தண்ணீர் என்று நினைத்து காகித டம்ளர்களில் பிடித்து அப்படியே அங்கேயே நின்று குடித்துவிடுகிறார்கள். ஒருவர் செய்தால் மற்றவர்கள் சும்மா இருப்பார்களா என்ன.. அனைவரும் அங்கே ஓடிச் சென்று நீரைப் பிடித்துக் குடித்து தங்களுக்கு தேவாமிர்தமே கிடைத்ததாக உளம் மகிழ்ந்து சென்றனர்.
ஆனால், உண்மையில், அது எந்த பிரசாதமோ, தீர்த்தமோ அல்ல என்றும், கோயிலுக்குள் இருக்கும் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளியேறிய நீர்தான் என்றும் அப்போதே செய்திகள் வெளியாகின. ஆனால் அதை யார் கேட்டார்கள்.
ஏசியிலிருந்து வெளியேறிய நீரை பக்தர்கள் பருகிச் சென்ற விடியோ, பல்வேறு தரப்பிலிருந்தும் பல்வேறு வகையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. சிலர், ஏசியிலிருந்து வெளியேறும் நீரைக் குடிப்பதால் பக்தர்களுக்கு ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறித்தும் கவலை தெரிவித்திருந்தனர்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து கோயில் நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது. கோயிலின் ஒரு சிற்பத்திலிருந்து வெளியேறிய நீர் ஏசியிலிருந்து ஒழுகிய நீர்தான், அபிஷேகம் செய்த தீர்த்தம் எதுவும் இல்லை. அதனை பக்தர்கள் அபிஷேக நீர் என்று நினைத்துக் குடித்துவிட்டனர்.
கடவுளின் மீதான பக்தர்களின் நம்பிக்கையை நாங்கள் மதிக்கிறோம், ஆனால், இந்த தகவலை அவர்களுக்கு நாங்கள் சொல்லித்தான் ஆக வேண்டும், பக்தர்கள் பலரும் அபிஷேக நீர் என நினைத்துக் குடித்தது ஏசியிலிருந்து வெளியேறிய நீர்தான். பொதுவாக அபிஷேக நீரோ அல்லது கோயில் தீர்த்தமோ, துளசி, ரோஜா இதழ்கள் சேர்த்து பக்தர்களுக்கு மரியாதையுடன் கோயில் வளாகத்தில்தான் வழங்கப்படும் என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
தீர்த்தம் என்று ஏசி தண்ணீரைக் குடித்த பக்தர்கள், தற்போது இந்த விளக்கத்தைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாங்கள் மிகுந்த இறை நம்பிக்கையோடு கோயிலுக்கு வந்தோம். இந்த செய்தி எங்கள் இதயத்தை சுக்குநூறாக்குகிறது. இந்த நீரை பக்தர்கள் குடிக்காத வகையில் கோயில் நிர்வாகம் தடுத்திருக்க வேண்டும் என்று பதிவிட்டிருக்கிறார்கள்.