அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு தொடங்கியது; வரலாறு படைக்கப்பது யார்? டிரம்ப், கமலா?
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு அந்நாட்டின் நேரப்படி நவம்பர் 5ஆம் தேதி அதிகாலை 5 மணிக்குத் தொடங்கியது.
குடியரசு சார்பாக டோனல்ட் டிரம்ப்பும் ஜனநாயகக் கட்சி சார்பாக கமலா ஹாரிசும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
கடந்த பல நாள்களாக இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், யார் வெற்றிக் கனியைச் சுவைப்பார் என்பதை அரசியல் நிபுணர்களாலும் இதுவரை முன்னுரைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே ஆகக் கடுமையான போட்டியுடைய அதிபர் தேர்தல்களில் ஒன்றாக 2024 தேர்தல் விளங்குவதைக் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.
நாடெங்கும் அல்லது தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் முக்கிய மாநிலங்களில் கமலா ஹாரிசும் டோனல்ட் டிரம்ப்பும் ஒரு விழுக்காட்டுப் புள்ளிக்குமேல் முன்னிலை வகிக்கவில்லை. இரு வேட்பாளர்களில் எவருக்கும் 270 இடங்களைக் கைப்பற்றும் அளவுக்குப் போதுமான மாநிலங்களில் முன்னிலை இல்லை.
நவீனகாலத் தேர்தல் வரலாற்றிலேயே போட்டி இவ்வளவு கடுமையாக இருந்ததைக் கருத்துக்கணிப்புகள் காட்டியதில்லை.
முக்கியத் தேர்தல் களமான பென்சில்வேனியாவில் இரு வேட்பாளர்களும் முன்னணி வகிப்பதை அல்லது சமநிலையில் இருப்பதை சில நம்பகமான கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.
வேட்பாளர்கள் இருவரும் வடதுருவம் தென்துருவத்தைப் போல முற்றிலும் வெவ்வேறு கொள்கைகள், நம்பிக்கைகள், திட்டங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர்.
தேர்தலின் முடிவுகளுக்காக அமெரிக்கா வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும்போதிலும் பிரசாரக்கூட்டங்களில் நிகழ்ந்தவை அமெரிக்கர்கள் மட்டுமன்றி உலக மக்களின் மனதிலும் பசுமரத்தாணியைப் போல பதிந்துவிட்டது என்று சொன்னால் அது மிகையன்று.
பிரசாரக்கூட்டங்களில் வாக்காளர்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசியது மட்டுமல்லாது நினைத்துப் பார்க்காத சம்பவங்களும் நிகழ்ந்தன.
பிரசாரக்கூட்டங்களின்போது டிரம்ப்பைக் கொல்ல இருமுறை முயற்சி செய்யப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.
அதுமட்டுமல்லாது, ஜனநாயகக் கட்சி சார்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதலில் களமிறங்கினார்.
டிரம்ப்புக்கு எதிரான விவாதத்தில் அவர் தட்டுத் தடுமாறியதை அடுத்து, முதுமை உடல்நலத்தைக் காரணம் காட்டி அவர் போட்டியிலிருந்து விலகினார்.
அவருக்குப் பதிலாக அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தேர்தலில் போட்டியிட்டார்.
இந்நிலையில், ஒருவேளை கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றாலும் டிரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ளமாட்டார் என்ற அச்சம் நிலவுகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் பைடனிடம் டிரம்ப் தோல்வி அடைந்தார்.
ஆனால், தேர்தல் முடிவுகளை டிரம்ப் ஏற்கவில்லை.
எதிரணி ஏமாற்றிவிட்டதாக அவர் கோபக் குரல் எழுப்பியிருந்தார்.
இதனால் பல பிரச்சினைகள் ஏற்பட்டன.
இம்முறை, முக்கிய மாநிலங்களில் வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்தால் வாக்குகள் மீண்டும் மீண்டும் எண்ணப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் சில நாள்கள் கழித்தே தேர்தல் முடிவு அறிவிக்கப்படக்கூடும்.
எது எப்படியாக இருந்தாலும், யார் வெற்றி பெற்றாலும் புதிய வரலாறு படைக்கப்படும்.
60 வயது கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றால், அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் எனும் பெருமை அவரைச் சேரும்.
டிரம்ப் வெற்றி பெற்றாலும் புதிய வரலாறு பதிவாகும்.
2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதியிலிருந்து 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி வரை அவர் அமெரிக்காவின் 45வது அதிபராகப் பதவி வகித்தார்.
அதன் பிறகு நடந்த அதிபர் தேர்தலில் அவர் பைடனிடம் தோல்வி அடைந்து அதிபர் பதவியை இழந்தார்.
இம்முறை வெற்றிபெற்றால் அவர் மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்பார்.
இவ்வாறு அதிபர் பதவி வகித்து, தோல்வி அடைந்து, மீண்டும் அதிபராவது கடந்த நூறு ஆண்டுகளில் யாருக்கும் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, நியூ ஹேம்ஷர் மாநிலத்தில் உள்ள டிக்ஸ்வில் நோட்ச் எனும் சிறிய நகருக்கென்றே தனித்துவம்வாய்ந்த தேர்தல் பாரம்பரியம் உள்ளது.
தேர்தல் நாளன்று அமெரிக்க நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு அவ்விடத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிப்பர்.
இம்முறையும் அவ்வாறு செய்தனர்.
இத்தேர்தலில் அந்நகரில் ஆறு பேர் மட்டுமே வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.
டிக்ஸ்வில் நோட்ச் நகரில் டிரம்ப்புக்கும் கமலாவுக்கும் தலா மூன்று வாக்குகள் கிடைத்தன.
இது இரு வேட்பாளர்களுக்கும் இடையே நிலவும் மிகக் கடுமையான போட்டியைப் பிரதிபலிக்கிறது.
தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர் தலைமையின்கீழ், அவரது கொள்கைகளின்படி, அவர் காட்டும் வழியிலேயே அமெரிக்கா செல்லும்.
அமெரிக்காவின் உள்நாட்டு விவகாரங்களில் மட்டுமன்றி உலக விவகாரங்களிலும் அது தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே, அமெரிக்கத் தேர்தல் முடிவுகளுக்காக அமெரிக்கர்களும் உலக மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.