முன்னாள் அமைச்சர்கள் – எம்.பிக்கள் வன்னியில் மக்களால் விரட்டியடிப்பாம் – மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று சொல்கின்றார் உதயராசா.

“வன்னியில் பல பகுதிகளில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் விரட்டியடிப்பதை நாம் காண்கின்றோம். மக்கள் மத்தியில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.”

இவ்வாறு ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் ப.உதயராசா தெரிவித்தார்.

வவுனியா, ஓமந்தையில் தொழிலதிபர் நெல்சன் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்தும் வன்னி மக்கள் இன்றும் மீளத் தம்மைக் கட்டியெழுப்ப முடியாத நிலையிலும், தமது அடிப்படைத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியாத நிலையிலும் உள்ளனர். இதற்கு கடந்த 15 வருடங்களாக அரசில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சராகவும் இருந்தவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களுமே காரணம்.

பல தடவைகள் மக்களது வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் தெரிவாகி நாடாளுமன்றக் கதிரைகளைச் சூடாக்கி விட்டு தமது பைகளை நிறைத்த அரசியல்வாதிகளே உள்னர். அவர்கள் மக்களது அடிப்படைத் தேவைகளைக் கூட முழுமையாகப் பூர்த்தி செய்யத் தவறியுள்ளதுடன், தமக்குள் ஆசனத்தைப் பெறுவதற்காகச் சண்டை போட்டு இன்று பல துருவங்களாக பிரிந்து மக்கள் முன்வருகின்றனர்.

பல பகுதிகளில் இவ்வாறான முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் விரட்டியடிப்பதை நாம் காண்கின்றோம். மக்கள் மத்தியில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இனியும் போலித் தேசியம் பேசி மக்களை ஏமாற்றி வாக்குகளைச் சுரண்ட முடியாது.

மக்கள் தமக்கான தலைவர்களை இனங்கண்டு வருகின்றனர். தபால் பெட்டியின் பின் தினமும் திரளும் மக்கள் கூட்டம் அதனை வெளிப்படுத்துகின்றது. அந்த மக்களின் நம்பிக்கைகளை நாம் வீண்போகச் செய்ய மாட்டோம்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் சொற்ப வாக்குகளால் எமது பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது. ஆனால், இம்முழற அதைத் தாண்டி நாம் இரண்டு ஆசனங்களைப் பெறக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் எம்முடன் கைகோர்த்து வருகின்றனர். அதற்கேற்ப மக்களின் அபிவிருத்திக்காக எமது குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும். அதற்கு மக்களின் ஆணை எமக்குப் பலமாகக் கிடைக்க வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.