விக்கிப்பீடியா இணையதளத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்!
விக்கிப்பீடியா இணையதளத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அளித்துள்ளது.
விக்கிப்பீடியா இணையதளத்தில் ஒருதலைப்பட்சமாக தகவல்கள் வெளியிடப்படுவதாகத் தொடர் குற்றச்சாடுகள் எழுந்தது. இந்நிலையில், மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம்,
விக்கிப்பீடியாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், “விக்கிப்பீடியா வெளியிடும் தகவல்கள் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. தகவல்கள் ஒரு சார்பாகவும், தவறானதாகவும் இருப்பதாக பல்வேறு புகார்கள் அரசுக்கு வந்துள்ளன.
விக்கிப்பீடியாவின் பக்கங்களை உருவாக்குவதிலும், திருத்தம் செய்வதிலும் ஒரு சிறிய குழு ஈடுபட்டு வருவதாக ஒரு பார்வை இருக்கிறது. விக்கிப்பீடியாவை இடைத்தரகராக கருதாமல், ஒரு வெளியீட்டாளராக ஏன் கருதக்கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக டெல்லியைச் சேர்ந்த செய்தி நிறுவனம் குறித்து தவறான தகவலை விக்கிப்பீடியா பதிவிட்டதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், எலான் மஸ்க் “விக்கிப்பீடியாவிற்கு நன்கொடை அளிப்பதை மக்கள் நிறுத்த வேண்டும். அது ‘தீவிர இடதுசாரி ஆர்வலர்களால்’ கட்டுப்படுத்தப்படுகிறது” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.