கால்வாயில் சிக்கிய கப் வாகனம் இருவர் மரணம்; இருவர் தப்பினர்.

அவிசாவளை, கொஸ்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எஸ்வத்த – மானகட வீதியில் தும்மோதர கால்வாயைக் கடக்க முற்பட்ட கப் வாகனம் ஒன்று நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
இதன்போது கப் வாகனமானது சுமார் 50 மீற்றர் தூரம் வரை நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
கப் வாகனத்தில் சாரதி உட்பட நான்கு பேர் பயணித்துள்ளனர். அவர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஏனைய இருவரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் பலல்கொட்டுவ மற்றும் கிரிபத்கொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 27 மற்றும் 69 வயதுடையவர்களாவர்.
மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.