பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூவர் விடுவிப்பு – வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு.

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிரான தீங்கு விளைவிக்கும் ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட மூவர் குற்றமற்றவர்கள் எனத் தெரிவித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் இன்று விடுவிக்கப்பட்டனர்.

வவுனியா, பெரியபுளியாளங்குளம் பகுதியைச் சேர்ந்த, சிறிசுப்பிரமணியம் கிரிசா, கந்தப்பு கஜேந்திரன் மற்றும் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த காகைசிங்கம் காந்தரூபன் ஆகிய சந்தேகநபர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டனர்.

கடந்த 2019 ஆண்டு ஜனவரி மாதம் வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் தீங்கு விளைவிக்கக் கூடிய ஆயுதங்களான கிளைமோர் குண்டுகளை உடமையில் வைத்திருந்தனர் என்று கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்படி மூவரும் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸ் விசாரணையின் அடிப்படையில் பீ அறிக்கை தயார் செய்யப்பட்டு வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

மேற்படி எதிரிகளுக்கு எதிராக வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைகள் நிறைவு பெற்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகள் பெறப்பட்டு 1996 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க தீங்கு விளைவிக்கும் ஆயுதச் சட்டம் 2 (1)ஆ பிரிவின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக எதிரிகளான மூவருக்கும் எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச தரப்பு வழக்குத் தொடுநரால் சந்தேகத்துக்கு அப்பால் இறை ஒப்புச்சாட்சியங்கள் சமர்ப்பிக்கத் தவறியமையால் சட்ட விதிகள் வழக்கத்தில் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேல் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் தீர்ப்புக்காகத் தவணையிடப்பட்டிருந்தது.

அந்தவகையில் தீர்ப்பை அறிவித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் எதிரிகளான மூவரையும் விடுவித்து தீர்ப்பளித்தார்.

குறித்த வழக்கில் இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கை தவிர்ந்து எவ்விதமான ஒப்புதல் சான்றிதழ்களும் வழக்குத் தொடுநரினால் அதாவது சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச தரப்பு வழக்குத் தொடுநரால் சந்தேகத்துக்கு அப்பால் சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாக நீதிபதி மா.இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளதுடன், அரச தரப்பின் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் தவறு இழைக்கப்படவில்லை என்ற அடிப்படையில் பிரிவு 134 இன் சான்று கட்டளை சட்டத்தின் பிரகாரம் தீர்ப்பளிக்கப்பட்டு எதிரிகளான மேற்படி மூவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர் என்றும் அறிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.