வவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 3 வேட்பாளர்களின் வாகனங்கள் பொலிஸாரால் தடுத்துவைப்பு சாரதிகள் மூவர் கைது.
வவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் மூன்று வேட்பாளர்களின் 3 வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சாரதிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வவுனியா பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
வேட்பாளரின் உருவப் படம் மற்றும் ஸ்டிக்கர் பொறித்த வாகனங்களில் வேட்பாளர்கள் பயணிக்க முடியும். வேட்பாளரின்றி அவருடைய உருவப் படம் அல்லது ஸ்டிக்கர் பொறித்த வாகனங்கள் பயணிப்பதற்குத் தேர்தல் திணைக்களம் தடை விதித்துள்ளது.
குறித்த விதிமுறையை மீறி வவுனியாவில் வேட்பாளர்களின்றி வேட்பாளர்களின் ஸ்டிக்கர்களுடன் நடமாடிய மூன்று வாகனங்களே வவுனியாப் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ப.சத்தியலிங்கம், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் ரசிக்கா பிரியதர்சினி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரது படம் பொறித்த வாகனங்களே தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின் வாகனங்களுடன் சாரதிகளை நீதிமன்றத்தில் முற்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.