ஆனைக்கோட்டை பகுதியில் ஆயுதம் ஏந்திய கும்பல் வீடு புகுந்து தாக்குதல்.. பல சொத்துக்கள் சேதம்..
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது நேற்றிரவு (06) கூரிய ஆயுதங்களால் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
முகமூடி அணிந்த 5 பேர் கூரிய ஆயுதங்களுடன் இரு மோட்டார் சைக்கிள்களில் வீட்டிற்கு வந்து, வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு பலத்த சேதம் விளைவித்து, வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் பொருட்களை சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றதாக பிரதேசவாசிகள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது இதுவரையில் வெளியாகவில்லை எனவும் தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் மானிப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.