’20’ இற்கு எதிராக பௌத்த பீடங்கள் போர்க்கொடி.
’20’ இற்கு எதிராக
பௌத்த பீடங்கள்
போர்க்கொடி!
– எதிர்ப்பு கடும் நெருக்கடியில் ராஜபக்ச அரசு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு கொண்டு வரும் அரசமைப்புக்கான இருபதாவது திருத்தத்துக்கு எதிராக பெளத்த மத பீடங்கள் திடீரெனக் கிளர்ந்துள்ளன என்ற செய்தி கொழும்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
சர்வாதிகாரத்துக்கு வழி செய்யும் இந்த அரசமைப்புத் திருத்த முயற்சிகளைத் தோற்கடிக்குமாறு பெளத்தத்தின் நான்கு பிரதான மத பீடங்களில் இரண்டான அமரபுர பீடமும், ராமன்ய பீடமும் நேற்று பகல் பகிரங்க செய்தியாளர் மாநாடு கூட்டி, அறிக்கை வெளியிட்டு அரசியல் தலைவர்களையும் பொதுமக்களையும் கோரியிருக்கின்றன.
பெளத்தத்தின் மற்றைய இரு மதபீடங்களான அஸ்கிரிய பீடமும், மல்வத்தை பீடமும் கூட இந்த நிலைப்பாட்டைக் கைக்கொள்ளக் கூடும் என விடயமறிந்த வட்டாரங்கள் ஊகம் தெரிவித்தன.
கோட்டாபயவை ஜனாதிபதி பதவிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை ஆட்சிப்பீடத்துக்கும் கொண்டு வருவதற்கு அயராது உழைத்த நாரஹன்பிட்டிய அபேராம விஹாரையைச் சேர்ந்தவரும், ‘துறவிகள் குரல்’ அமைப்பின் தலைவருமான முருத்தெட்டுவேகம ஆனந்த தேரர், வெல்லம்பிட்டிய விகராதிபதி மெதகொட அபேதிஸ்ஸ தேரர், எல்லே குணவங்ஸதேரர் போன்ற பலரும் அண்மைக்காலத்தில் இருபதாவது அரசமைப்புத் திருத்தத்துக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களை பகிரங்கமாக வெளியிட்டு வரும் சமயத்திலேயே, நேற்று அதிரடிக் காய்நகர்த்தலாக அமரபுர மற்றும் ராமன்யபீடங்களின் சார்பில் அவற்றின் செயலாளர்கள் செய்தியாளர்கள் மாநாடு கூட்டி, இது தொடர்பான பகிரங்க அறிவிப்பை விடுத்தனர்.
இரண்டு மத பீடங்களினதும்சார்பில் ஒப்பமிடப்பட்ட கூட்டறிக்கைஅங்கு வெளியிடப்பட்டது. அரசமைப்பின் இருபதாவது திருத்தத்துக்கான மூன்றில் இரண்டு பங்குபெரும்பான்மை ஆதரவை நாடாளுமன்றத்தில் பெறுவதற்குத் தீவிரமாக முயற்சித்து வரும் கோட்டாபய அரசுக்கு பெளத்தபீடங்களின் திடீர் கிளர்ச்சி பெரும் பின்னடைவு என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேவேளை, அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டவரைவை அரசு நிறைவேற்றக்கூடாது என வலியுறுத்தி அமரபுர − ராமஞ்ஞ ஆகிய பௌத்த பீடங்களின் மகா சபை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி வரவேற்றுள்ளது.