வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்து வவுனியாவில் பண மோசடி! 3 இசைக்கலைஞர்கள் கைது!!
வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்ட வவுனியாவைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் மூவர் நிதிக் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இசைக்கலைஞர்களாகச் செயற்படும் 3 இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் சமயங்களில் பக்க வாத்தியக் கலைஞர் எனும் அடிப்படையில் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்தே தன்னிடம் பணத்தைப் பெற்றனர் என்று வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் முறைப்பாடு செய்திருந்தார்.
அந்த முறைப்பாட்டை மேற்கொண்டவர் தன்னை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்து அதற்காக ஒரு கோடியே 66 இலட்சம் ரூபா பணத்தை மேற்படி இசைக்கலைஞர்கள் பெற்றனர் என்றும், அந்தப் பணத்தை அந்தக் கலைஞர்களில் ஒருவரது வங்கிக்கணக்கில் தான் வைப்புச் செய்தார் என்றும் முறையிட்டிருந்தார்.
அதற்கமைய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூவரும் இதற்கு முன்பும் சிலரிடம் பணம் பெற்று அவர்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றனர் என்று கூறப்படுவதனால் மூவரின் வங்கிக்கணக்குகளும் பரிசோதிக்கப்படுவதோடு வாக்குமூலங்களைப் பெறுவதற்காக மூவரும் வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.