பயணிகள் கப்பல் சேவை தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடர்பாகக் காணப்படுகின்ற முறைப்பாடுகள் மற்றும் திருப்தியின்மை குறித்து ஆராயப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில் ஆளுநர், துறைமுக அதிகார சபையின் பிரதிப் பிரதம செயற்றட்ட முகாமையாளர், காங்கேசன்துறைத் துறைமுக பொறுப்பு அதிகாரி, உதவி பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வடக்கு மாகாண சுற்றுலாத்துறை தவிசாளர், பணிப்பாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் அதிகாரிகள் மற்றும் ஓட்டோ உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

காங்கேசன்துறை சுங்கத்தில் இரண்டு கருமபீடங்களே தற்போது உள்ளதால் பயணிகள் வெளியேற நேர தாமதம் ஏற்படுகின்றது. எனவே, மேலதிகமாக இரண்டு கருமபீடங்களைச் செயற்படுத்துமாறு துறைமுக அதிகார சபை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கடமையாற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் நடத்தைகள் தொடர்பில் உள்ள முறைப்பாடுகளை உரிய வகையில் விசாரணை மேற்கொண்டு பொருத்தமான நடவடிக்கையைத் துரிதமாக மேற்கொள்வதற்கான அறிவுறுத்தல் ஆளுநரால் வழங்கப்பட்டது.

சட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைய கொண்டுவர அனுமதி மறுக்கப்பட்ட பொருட்கள், பழங்கள் போன்றவை தொடர்பில் பயணிகளுக்கு உரிய விழிப்பூட்டல் காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டின துறைமுகங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

துறைமுகம் மற்றும் விமான நிலையப் பகுதியில் சேவையில் ஈடுபடும் ஓட்டோ உரிமையாளர்கள் சங்கத்தினரின் கருத்துக்கள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டு கலந்துரையாடப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.