முல்லைத்தீவு மாவட்ட காணிப் பிரச்சினைகள்: மக்களுடன் வடக்கு ஆளுநர் கலந்துரையாடல்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது மாவட்ட அரச அதிபர் உமாமகேஸ்வரன், ஆளுநரை வரவேற்றதோடு இருவருக்கும் இடையில் மாவட்டத்தின் அபிவிருத்தி நிலைமைகள் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் பின்னர் காலை 10 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை முல்லைத்தீவு மாவட்டத்தில் தீர்க்கப்படாது இருக்கும் காணிப் பிரச்சினைகள் மற்றும் காணிப் பிணக்குகள் தொடர்பில் மாவட்ட மக்களுடனும் உரிய தரப்பினருடனும் விரிவாகக் கலந்துரையாடி சில பிரச்சினைகளுக்கு இறுதித் தீர்வைப் பெற்றுக்கொடுத்ததுடன் முடிவுகள் எட்டப்படாத காணிப்பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் விரைவாக தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் ஆளுநர் உறுதியளித்தார்.
இதன்போது வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் குணபாலன், வடக்கு மாகாண காணி ஆணையாளர் சோதிநாதன், முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் காணிக் கிளையின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.