யாழ். மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவின் 3 ஆவது காலாண்டுக்குரிய குழுக் கூட்டம் யாழ். மாவட்ட அரச அதிபரும் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் மாவட்ட செயலகக் கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் யாழ். மாவட்ட அரச அதிபரால் பின்வரும் விபரங்கள் தெரிவிக்கப்பட்டன.
1.நல்லூா் பிரதேச செயலகத்துக்குட்பட்ட உதயபுரம் – மணியந்தோட்டத்திலிருந்து நகர்புற பாடசாலைக்கு வரும் மாணவர்களின் நன்மை கருதி இலங்கை போக்குவரத்துச் சேவையை பாடசாலை விடுமுறை விட்டு தொடங்கும் நாளிலிருந்து காலை 6.30 மணிக்கு ஆரம்பிக்கும் சேவையானது 7.45 மணிக்கு யாழ். நகரை வந்தடையும் என்றும், பிற்பகல் 1.10 இற்கு யாழ். நகரிலிருந்து ஆரம்பிக்கும் சேவையானது 2.15 இற்கு உதயபுரம் – மணியந்தோட்டத்தைச் சென்றடைய ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன என்று அரச அதிபர் தெரிவித்தார்.
2. மாணவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும்போது அதிபர் தன்னிச்சையாகத் தீர்மானம் எடுக்காது ஒழுக்காற்று குழு அமைத்து நடவடிக்கை எடுப்பதனை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அரச அதிபர் கேட்டுக்கொண்டார்.
3. இதுவரை சிறுவர்களுக்கான பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் பதிவு செய்யாதவர்களுக்கான நடமாடும் சேவையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரச அதிபர் அறிவுறுத்தல் வழங்கினார்.
4. பாடசாலை இடை விலகல் மற்றும் மீளிணைப்புச் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்த அரச அதிபர், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் அறிவுறுத்தல் வழங்கினார்.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண நன்னடத்தைப் பணிப்பாளர், யாழ். மாவட்ட உதவி செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ,பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.