சனத் நிஷாந்தவின் இல்லத்திற்கான மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இறப்பதற்கு முன்னர் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்திற்கான மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ‘லங்காதீப’ செய்தி வெளியிட்டுள்ளது.
சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி திருமதி சாமரி பெரேராவிற்கு உடனடியாக வீட்டைக் கையளிக்குமாறு பல முறை நினைவூட்டிய போதிலும், அவர் தொடர்ந்தும் வீட்டைக் கையளிக்க மறுத்து வருவதாக பொது நிர்வாக அமைச்சின் வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பான வீட்டு வாடகையை கூட அவர் செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலைமையினால் வழமையான முறையில் வீடுகளை கையகப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் அமைச்சின் அதிகாரிகளுக்கு அந்த விடயங்களில் போதிய ஆதரவு கிடைக்கவில்லை எனவும் பொது நிர்வாக அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அவரது உத்தியோகபூர்வ இல்லம் தவிர்ந்த ஏனைய முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய வீடுகள் அனைத்தும் கையளிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.